சென்னை: வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 12-வது இடத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகி்த்த ஆர்எம்டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நீதிபதி டீக்காராமன் ஆர்.எம்.திருவேங்கடம், மீனாட்சி தம்பதிக்கு கடந்த 1963 ஜூன் 9 அன்று பிறந்தார்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் வூர்ஹீஸ் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பையும், வேலூர் வூர்ஹீஸ் கல்லூரியில் பிஎஸ்சி கணிதத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். சென்னை பல்கலைக்கழகத் தின் ராமானுஜம் நிறுவனத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1988-ம் ஆண்டு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1988 நவ.11 அன்று பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் நிபுணத்துவம் பெற்று வழக்கறிஞராக தொழில் புரிந்து வந்த டீக்காராமன் 2004-ம் ஆண்டு நேரடி நியமனம் மூலமாக மாவட்ட நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றிய இவர் தமிழ்நாடு மாநில விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராகவும், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் பதிவாளராகவும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளராகவும் பதவி வகித்தார். அதன்பிறகு 2016-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு அதன்பிறகு நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.
தற்போது 12-வது நீதிபதியாக பணிபுரிந்து வரும் நீதிபதி டீக்காராமன் இன்றுடன் (ஜூன் 7) பணி ஓய்வு பெறுகிறார். இவரது மூத்த சகோதரர் பசுபதி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி யில் பேராசிரியராகவும், இவரது மனைவி டாக்டர் மஞ்சுளா ராமன் தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும், மூத்த மகள் டி. சாதனா ராமன் பொறியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இளைய மகள் டி. மயூரி 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஏற்பாட்டில் புதுடெல்லியில் நடைபெற்ற எச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்த தேசிய கருத்தரங்குக்கு தலைமை வகித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணிக்காலத்தில் மொத்தம் 23,243 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.
முக்கிய தீர்ப்புகள்: குறிப்பாக தங்களது பிள்ளைகளின் பெயர்களில் சொத்துகளை எழுதி வைத்து விட்டு முதியோர் இல்லங்களில் நாட்களை எண்ணி ஏமாந்த பெற்றோருக்கு ஆறுதலாக, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவாய் கோட்டாட்சியரே அந்த தானப் பத்திரங்களை ரத்து செய்யலாம் என்ற இவரது தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு அருமருந்து.
அதேபோல ஜீவனாம்ச வழக்குகளில் கணவன்மார்களை நிராயுதபாணியாக விட்டுவிடக்கூடாது என்றும், கணவரின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மனைவி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பும் முக்கியமானது.
இதேபோல சரியாக படிக்கவில்லை என திட்டியதால் மனமுடைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதற்காக ஆசிரியர்களை பலிகடாவாக ஆக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளார். இப்படி சமுதாயத்தில் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்காகவும், கல்வியாளர்களுக்காகவும் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் என்பது குறி்ப்பிடத்தக்கது.