மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகப் புகார் அளித்ததால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் விசாரணைக்காக ஆஜராக வாஞ்சிநாதனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர் இன்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலைய அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
இதன் பின், செய்தியாளர்களிடம் வாஞ்சிநாதன் கூறியது: “உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து புகார் மனுவை பதிவு தபால் மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தேன். என்னுடைய புகார் மனு குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உச்ச நீதிமன்ற நீதிபதியிடம், உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது புகாருக்கு தற்போது வரை எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. உடனே எப்ஐஆர் பதிவிட வேண்டும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்து வரும் நிலையில் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும், எனக்கு எதிராகவும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்துகின்றன.
விரைவில் திமுக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளேன். திமுக எனக்கு ஆதரவாக எந்த ஓர் அறிக்கையையும் தற்போது வரை வெளியிடவில்லை. திமுகவினர் எனக்கு வீடு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதை நிரூபித்தால் உரியவருக்கு அந்த வீட்டைக் கொடுக்க தயாராக உள்ளேன்” என்று அவர் கூறினார்.