மதுரை: சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று எழுத்தாளர் சோ.தர்மன் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பரிந்துரை செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் சோ.தர்மன், அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆணிவேரில் வெந்நீர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அவர் சாதிய மனோபாவத்துடன் செயல்படுவதாக வழக்கறிஞர் ஒருவர் குற்றம்சாட்டியது போராட்டமாக மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டு நீதித்துறையின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றுவதுபோல உள்ளது.
நீதிபதிகளின் தீர்ப்புகளை விவாதிக்கலாம், கருத்து கூறலாம். ஆனால், நீதிபதிகள் சாதி மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை தக்க சாட்சியங்கள் இல்லாததால் நீதிபதி விடுதலை செய்கிறார். குற்றவாளியும் நீதிபதியும் ஒரே சாதி என்பதால் விடுதலை செய்துவிட்டார் என்றோ, தண்டனை வழங்கினால் நீதிபதியும், குற்றவாளியும் எதிர் சாதி என்பதால் தண்டித்து விட்டார் என்றோ, ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் முன்ஜாமீன் வழங்கி விட்டார் என்றோ கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இதுவரை இம்மாதிரியான குற்றச்சாட்டு எந்த நீதிபதியின் மீதும் சுமத்தப்பட்டதில்லை.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சில ஆண்டுகளுக்கு முன்பு எனது முகநூல் பதிவு ஒன்றை, அவரது தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து மதுரையில் நடைபெற்ற ஒரு புத்தகவெளியீட்டு விழாவில் அவரை சந்தித்தேன். சாப்பிட அமர்ந்திருந்த அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். உடனே அவர் எழுந்து, என் கைகளைப் பிடித்து இழுத்து கொண்டுபோய் அவருக்கு அடுத்த இருக்கையில் அமரச்செய்து, எனக்கும் உணவு பரிமாற வைத்தார். வெகு நாட்கள் பழகிய நண்பரைப்போல பல விஷயங்கள் பேசினார். அவர் சாதிய மனோபாவம் கொண்டவராக இருந்திருந்தால், என்னை அருகில் அமர வைத்து, உணவருந்தி இருப்பாரா? அவரிடம் எப்படி சாதி துவேஷம் இருக்கும்?
நீதிமன்றங்களில் சாதி மனோபாவத்துடன் நீதிபதிகள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் கிடையாது. சுதந்திரமாக செயல்படும் நீதியரசர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிக்கும் சக்திகளின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பதிவு: இதேபோல, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லஜபதிராயின் பதிவில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது. அதைக் கைவிடவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை சாதி வெறியர் போல சமூக ஊடகங்களில் சித்தரிப்பது நியாயமற்றது. அவ்வாறான எண்ணத்தை நீதிபதி கொண்டிருந்தால், அருந்ததியர் சமூக இடஒதுக்கீடு வழக்கில், ஒத்த கருத்துடைய வழக்கறிஞர் நண்பர்களுடன் இணைந்து வெற்றிபெற தீவிரமாக உழைத்திருக்க மாட்டார்.
ஸ்டெர்லைட் தொடர்புடைய குற்ற வழக்குகளில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு 50-க்கும் அதிகமான வழக்குகளில் பிணை வழங்கி உத்தரவிட்டிருக்க மாட்டார். நீதிபதி ஒருவர் தவறிழைத்தால் முதலில் அதுகுறித்து விவாதிக்க வேண்டியது அந்தந்த மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களே. அதன்படி, பொது தலத்தில் வெளியான வாஞ்சிநாதன் புகார் குறித்து விவாதித்து, அதன் மெய்த்தன்மை தொடர்பாக அறிவிக்க முன்வர வேண்டியது மதுரை அமர்வின் 5 வழக்கறிஞர் சங்கங்களே. தற்போது நிலவும் சூழல், நீதித்துறை அமைப்பு மேலும் பலவீனப்படவே வழிவகுக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட் டுள்ளார்.