மதுரை: நீதித்துறை செயல்பாடுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல என வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு: எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி பாகுபாகுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நாளில் 26.07.2025 அன்று ஒரு மண்டபக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான டி.ஹரிபரந்தாமன், கூட்டத்தினர் மற்றும் ஊடகங்களுக்கு உரையாற்றினார்.
இந்த நீதிமன்றத்தின் மற்றொரு முன்னாள் நீதிபதியான கே.சந்துரு, இந்த அமர்வின் நடவடிக்கையை கேள்வி எழுப்பி தனது சார்பாகவும், சில ஓய்வுபெற்ற நீதிபதிகள் சார்பாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ஒரு நீதிபதி, அந்த அறிக்கைக்கு தான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்பதை தெரிவித்துள்ளார். இதை விளக்க வேண்டியது நீதிபதி கே.சந்துருவின் பொறுப்பாகும். நீதித்துறை செயல்பாட்டில் இதுபோன்ற தலையீடு இருப்பது சரியல்ல. ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அணுகுமுறை மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புவதற்கு முன்பு இயற்கை நீதியின் கொள்கைபடி செயல்பட விரும்பினோம். வாஞ்சிநாதன் மனம் மாறியிருந்தால் வழக்கை முடித்து வைப்பது தான் எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால் வாஞ்சிநாதனுக்கு அப்படிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. அவர் எங்கள் முன் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க மறுத்துவிட்டார். முந்தைய விசாரணையின் போது எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் அமைதியாக உள்ளது.
நீதிமன்றம் முன்பு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ தனது அவதூறை மீண்டும் கூறினால், பின்விளைவுகள் ஏற்படும் என்பதை வாஞ்சிநாதன் அறிந்திருக்கலாம். இது அவரின் தைரியத்தை தெரிவிக்கிறது. தன்னை ஒரு செயல்பாட்டாளர் என்று கூறிக் கொள்ளும் அவர், தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். பின் விளைவுகளை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். அதிலிருந்து அவர் தவறக்கூடாது. அவரது வீடியோ ஒளிபரப்பப்பட்டு அது குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது போது, அதை எழுத்துப்பூர்வமாக அவருக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்.
நீதித்துறை சுதந்திரம் என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும். நீதிபதிகள் நீதித்துறை கடமைகளை பாரபட்சமாக இல்லாமல்,அச்சமின்றி நிறைவேற்றுவதாக உறுதிமொழி எடுக்கின்றனர். ஒரு நீதிபதி ஒரு வழக்கில் முடிவெடுக்கும் போது அந்த வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் வெற்றி பெறவோ, தோற்கவோ இல்லை. அந்த வழக்கில்தான் வெற்றி அல்லது தோல்வி அடைகிறார்.
வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ஒரே குடும்பத்தினர். சட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு நீதிபதி அவர் மனசாட்சிப்படியும், உறுதிமொழியை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலமும் தனது நீதித்துறை கடமைகளைச் செய்கிறார். அவர் பதவியில் இருக்கும்போது தனது சாதி அல்லது மத அடையாளத்துடன் செயல்படுவதாக கருத முடியாது. யாராவது அப்படியான கருத்தைத் கொண்டிருந்தால், அவர்கள் மஞ்சள் காமாலை கண்களுடன் இருப்பவர்களாகத் தான் இருப்பர்.
தனிப்பட்ட முடிவுகளால் பாதிக்கப்படுபவர்கள் சட்டப்படியான பல தீர்வுகள் உள்ளன. அந்த தீர்வுகளை நோக்கி செல்லாமல் சமூக ஊடகங்களில் மதவாத, சாதிவாத பிரச்சாரங்களை நடத்துவது நீதித்துறை அமைப்பையே பலவீனப்படுத்தும். சமூக ஊடகங்களில் விவாதத்தின் அளவுகோலை ஒழுங்குபடுத்த வேண்டிய நேரம் இது.
பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் பெயரில் மேற்கொள்ளப்படும் அவமதிப்பு செயல்களை மன்னிக்க முடியாது. இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் சமூக ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற அவதூறான அறிக்கைகளை வெளியிடும் வழக்கறிஞர்கள் தொழில்முறை தவறான நடத்தை கொண்டவர்கள். எதற்கும் லட்சுமணன் ரேகை உள்ளது, அதை மீறினால் அது ஆபத்தை விளைவிக்கும்.
வாஞ்சிநாதன் தனக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவைத் திரட்டியுள்ளார். இன்றைய முடிவுக்காகக் காத்திருக்காமல் அவர்களும் பொறுப்பற்ற கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதை புறக்கணிக்கிறோம். வாஞ்சிநாதனின் நடத்தை ஒரு வழக்கறிஞருக்குத் தகுதியற்றது என்று கூறி ஏற்கெனவே அவர் இந்திய பார் கவுன்சிலால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் தனது நடத்தையை மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் தனது வழிகளை மாற்றிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அவர் தொடர்ந்து நீதித்துறையை அவதூறாகப் பேசுகிறார். வாஞ்சிநாதனின் நடத்தை மேற்கூறிய கொள்கைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். அவர் இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க முடியும் எனக் கூறியுள்ளார். அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இன்னும் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் செய்தி சேனல் ஒன்று அபத்தமான, தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். எனவே, இந்த வழக்கின் ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்ப பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம். தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.