சென்னை: “நீங்கள் ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கற்ற கல்விதான் காரணமா?” என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக அரசு நடத்திய கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் கலந்துகொண்டனர்? என்னைப் பொறுத்தவரை அது ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் மாதிரி இருந்தது. கல்வியில் சிறந்தவர்கள் இந்த நாட்டில் இல்லையா? அவர்களை பேச வைத்திருக்கலாமே.
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள், மருத்துவராக வேடமிட்டு வருவதுபோல் இருந்தது கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா. இது திராவிட மாடல் அல்ல, விளம்பர மாடல் அரசு. செய்தி அரசியல் மற்றும் விளம்பர அரசியலைத் தவிர்த்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. 2,500 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டனர். இன்றைய நிலையில் கழிவறையை விட மிக மோசமான நிலையில், அரசுப் பள்ளிகள் உள்ளன. கல்வியை முதலாளிகள் லாபம் ஈட்டும் கடைகளாக மாற்றிவிட்டு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது என்ன நியாயம்?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் தாய்மொழி தேர்வு எழுத மையத்துக்கு வரவில்லை. பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தாய்மொழி எழுத, படிக்க தெரியவில்லை. என்ன சிறக்கிறது தமிழ்நாடு கல்வியில்? கல்வி நிலையங்களை முதலாளிகளின் லாபம் ஈட்டும் சந்தையாக மாற்றிவிட்டு, கல்வியில் சிறக்கிறது தமிழ்நாடு என்று கூறுகின்றனர்.
திமுக அரசு ஒரு உப்புமா கம்பெனி. இவர்கள் காலை உணவு போட்டு, சமூக நீதியை காத்து, அவர்கள் மொழியில் கட்டிடத்தின் பெயர்தான் சமூக நீதி. செங்கல், சிமென்ட் பெயர்தான் சமூக நீதி. அதுவும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அமர்ந்து படிக்கும் கட்டிடத்துக்குப் பெயர் சமூக நீதி. சமூக நீதியை காக்க வேண்டும் என்றால் அனைவரும் சமமாக அமர்ந்துதானே கல்வி கற்க வேண்டும். கட்டிடத்துக்கு சமூக நீதி என்று பெயர் வைத்தால் சமூக நீதி கிடைத்துவிடுமா?
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் (‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து), எனது பேச்சைக் குறிப்பிட்டு, ‘இளையராஜா படித்தாரா, சச்சின் படித்தாரா, ரஹ்மான் படித்தாரா என்று கூறுபவர்களை நம்ப வேண்டாம்’ என்று கூறுகிறார். முதலில் நான் என்ன கூறினேன் என்பதே தெரியவில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்பதே புரியவில்லை. நீங்கள் ஒரு சினிமாவை இயக்கி இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கற்ற கல்விதான் காரணமா? தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் என்ன பேசினேன் என்பதை முழுமையாக கேட்பதில்லை. மேடையில் என்னைப் பற்றி பேசிய கைதட்டல் வாங்க வேண்டும், அவ்வளவுதான்.
இவ்வளவு ஏன்… முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரது கல்வித் தகுதி என்ன? இதில் வேறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார், ‘என்னுடன் கல்வி பயின்றவர் வழக்கறிஞர் ஆகிவிட்டார், நான் படிக்காமல் துணை முதல்வர் ஆகிவிட்டேன்’ என்று” என சீமான் கூறியுள்ளார்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசியது என்ன? – வீடியோ: