அண்மையில் ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ-வும் திமுக எம்பி-யும் ‘முட்டாப் பயலே’ வசனம் பேசி மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணையே இன்னும் முடியாத நிலையில், மயிலாடுதுறை மாவட்ட திமுக-விலும் அப்படியொரு கலகம் வெடித்துள்ளது.
ஜூலையில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக சிலர் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஒருவழியாக அதைச் சமாளித்து இருதரப்பையும் சாந்தப்படுத்தினார் நேரு. இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி நடந்த கூட்டத்திலும் ரத்தக் களறி ஆகுமளவுக்கு மீண்டும் மோதல் வெடித்தது.
அந்தக் கூட்டத்தில், ஐடி விங்க் மாநில இணைச் செயலாளர் ஸ்ரீதர், நிவேதா முருகனை குற்றம்சாட்டி பேசினார். இதை கண்டித்த வர்த்தக அணி அமைப்பாளர் பாலமுருகன் நிவேதாவை ஆதரித்துப் பேச, இருதரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நாற்காலிகளால் தாக்கிக் கொள்ளுமளவுக்கு விவகாரம் முற்றியது. அரங்கிற்கு வெளியிலும் நிவேதா முருகனுக்கு ஆதரவாக திரண்டிருந்த வெளிநபர்களால் கலவர சூழல் ஏற்பட்டதால் மாவட்ட எஸ்பி-யான ஸ்டாலின் தலைமையில் அங்கு வந்த போலீஸார், கூட்டத்தைக் கலைத்தார்கள்.
ஓப்பந்தப் பணிகளை திமுக-வினருக்கு தருவதில்லை, கட்சியினரை மதிப்பதில்லை என்பதே நிவேதா முருகனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகச் சொல்லப்பட்டாலும், நிஜமான காரணம், மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதும், பூம்புகார் தொகுதியில் இந்தத் தேர்தலில் யார் நிற்பது என்ற போட்டியும் தான் என்கிறார்கள்.
மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிந்த போது குத்தாலம் கல்யாணம் மாவட்ட திமுக செயலாளராக தேர்வானார். ஆனால், 2016 தேர்தலில் மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் திமுக தோற்றுப் போனதால் கல்யாணத்தைத் தூக்கிவிட்டு நிவேதா முருகனை மாவட்டச் செயலாளராக்கியது தலைமை. அப்போதிருந்தே இருவருக்கும் இடையில் பனிப்போர் தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில், 2021-ல் பூம்புகார் தொகுதியை தனது மகனும் முன்னாள எம்எல்ஏ-வுமான குத்தாலம் அன்பழகனுக்கு கொடுக்க வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார் குத்தாலம் கல்யாணம். ஆனால், மாவட்டச் செயலாளர் கோட்டாவில் தொகுதியை தனக்காக ஒதுக்க வைத்தார் நிவேதா முருகன். இதனால் இருதரப்புக்கும் இடையிலான அரசியல் பகை இன்னும் முற்றியது.
இப்போது மீண்டும் தேர்தல் நெருங்குவதால் கடந்தமுறை மகனுக்கு கிடைக்காமல் போன பூம்புகாரை இம்முறை சாத்தியப்படுத்திக் கொடுக்க கல்யாணம் கங்கணம் கட்டுகிறார். அதற்கு ஏதுவாகவே நிவேதா முருகனுக்கு எதிராக கல்யாணத்தின் விசுவாசிகள் குடைச்சல் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். எம்எல்ஏ சீட் கிடைக்க வேண்டுமானால் மாவட்டச் செயலாளர் பதவி தங்களிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் குத்தாலம் கல்யாணம், தனது மகன் அன்பழகனை அதற்காக தயார்படுத்துகிறார். அதன் வெளிப்பாடுதான் மாவட்ட திமுக-வில் நடக்கும் மோதல்கள் என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய குத்தாலம் அன்பழகன், “14 ஒன்றியச் செயலாளர்களில் 11 பேரும் நகர, பேரூராட்சி செயலாளர்களில் பெருவாரியானவர்களும் மாவட்டச் செயலாளருக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இப்போது அவரை எதிர்த்துப் பேசுகிறவர்கள் அனைவருமே ஒருகாலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தான். அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் தான் இப்போது அவரை எதிர்க்கிறார்கள். அதை எதிர்கொள்ள முடியாமல் ஆட்களை வைத்து மிரட்டுவது, தாக்குவது உள்ளிட்ட நடவடிக்கையில் நிவேதா முருகன் ஈடுபட்டு வருகிறார். மற்றபடி, இப்போது நடக்கும் சம்பவங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
நிவேதா முருகனோ, “தொடர்ச்சியாக மாவட்ட திமுக கூட்டத்தில் மோதல் நடப்பதாகச் சொல்வது தவறு. எல்லோரையும், எல்லோருக்கும் பிடிக்காது. அதுபோல என்னைப் பிடிக்காத அதிருப்தியாளர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் பிரச்சினை உருவாகிறது. என்னை மாற்ற வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களா என்றும் எனக்கு தெரியவில்லை. என் மீது எந்தத் தவறும் கிடையாது. அப்படி நான் தவறு செய்திருந்தால் தலைமை என் மீது நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் கட்சியினர் இப்படி தங்களுக்குள் அடித்துக்கொள்வதை திமுக தலைமை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்காகாது!