திருச்சி: திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நிபந்தனைகளை மீறியதாக திருச்சி தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது 3 காவல் நிலையங்களில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தை தொடங்கினார். இதற்காக திருச்சி மாநகர போலீஸார் 23 நிபந்தனைகளை விதித்து, பிரச்சாரத்துக்கு அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால், போலீஸாரின் நிபந்தனைகளை தவெக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் பின்பற்றவில்லை. மேலும், தனியார், அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தி இருந்தனர்.
இதையடுத்து, திருச்சி தவெக தெற்கு மாவட்ட தலைவர் கரிகாலன், மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஆதித்ய சோழன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இமய தமிழன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் விக்னேஷ்குமார், மகளிர் அணி மாவட்டத் தலைவர் துளசிமணி மற்றும் சிலர் மீது பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொது இடத்தில் எரிச்சல் ஊட்டும் வகையில் செயல்பட்டது, பொது சொத்துகளை சேதப்படுத்தியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.