சென்னை: தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள தேவநாதன் யாதவ் தனது சொந்தப் பணம் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு அக்.30 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த100-க்கும் மேற்பட்டோரிடம் பல நூறு கோடி மோசடி செய்ததாக அதன் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் இயக்குநர்கள் என 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2024 ஆகஸ்டில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள தேவநாதன் யாதவுக்கு ஜாமீன் கோரி, 3-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நடந்தது. தேவநாதன் யாதவுக்காக மூத்த வழக்கறிஞர் எஸ்டிஎஸ்.மூர்த்தி, வழக்கறிஞர் ஹரியும், அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜ்திலக்கும் வாதிட்டனர். முதலீட்டாளர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அஷ்வின்குமார், அருண் சி.மோகன் உள்ளிட்டோர் வாதிட்டனர். வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: ‘முதலீட்டாளர்களின் முதிர்ச்சி தொகையை, ஓராண்டுக்குள் தனது சொத்துகளை விற்று திருப்பி அடைத்து விடுவேன். மற்ற முதலீடுகள் முதிர்ச்சியடைந்ததும் உடனே தந்துவிடுவேன்’ என்று மனுதாரர் உத்தரவாதம் அளித்துள்ளார். தனக்கு ரூ.633 கோடி சொத்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், ‘இதில் பெரும்பாலானவை 3-வது நபர்களின் பெயரில் உள்ளன. பல சொத்துக்கள் வில்லங்கம் உள்ளவை.
அவற்றின் வழிகாட்டி மதிப்பீடு ரூ.36 கோடி’ என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை முதலீட்டாளர்களுக்கு ரூ.300 கோடியை உடனடியாக திருப்பி தரவேண்டும் என்ற நிலையில், ஜாமீன் வழங்கினால்தான், அவர் தனது சொத்துகளை விற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கான தொகையை திருப்பி தரமுடியும். எனவே, அவருக்கு இடைக்காலமாக ஜாமீன் வழங்குகிறேன். நிறுவன இயக்குநர்கள் மற்றும் தனது பெயரில் உள்ள சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை அவர் தரவேண்டும்.
ஜாமீன் நிபந்தனையாக தனது சொந்தப் பணம் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றமான டான்ஃபிட் நீதிமன்றத்தில் அக்.30-க்குள் டெபாசிட் செய்ய வேண்டும். ரூ.10 லட்சம் மதிப்பில் இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளித்து, கீழமை நீதிமன்றத்தில் அவர் இடைக்கால ஜாமீன் பெறலாம். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற அனுமதி பெறாமல் சொத்துகளை விற்கவோ, உரிமம் மாற்றவோ கூடாது. அக்.30 வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் விசாரணை நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.
இந்த நிபந்தனைகளை மீறினால், விசாரணை நீதிமன்றம் சட்டரீதியாக தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம். அக்.31-ம் தேதி அவர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்டும். தனது சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு தொகை வழங்குவேன் என்று அவர் அளித்த உத்தரவாதத்தை உறுதி செய்யும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதால், அதற்குள் சொத்துகளை விற்க தேவையான நடவடிக்கையும், அதற்கான திட்டத்தையும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.