புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காததால் புதுச்சேரிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆகஸ்ட்டில் புதுச்சேரியில் நடக்கும் விழாக்களில் பங்கேற்க பிரதமர் மோடி வரவுள்ளார் என்று சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார்.
புதுவை பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “தவளகுப்பத்தில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இத்தகவல் கிடைத்தவுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3.50 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீஸார் 3 பேர் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடங்களிலும் 25 சதவீத இடஒதுக்கீடு புதுவை மாணவர்களுக்கு வழங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளின் பொதுக் கணக்கு குழு கூட்டத்தை புதுவையில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் பொதுக்கணக்கு குழு மாநாடு புதுவையில் நடைபெறுகிறது. ஆயுஷ் இயக்குனரகம் சார்பில் நடைபெற்ற யோகா விழாவில் இந்தியில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்தவுடன் உடனடியாக அகற்றி தமிழில் பதாகைகள் வைக்க உத்தரவிட்டப்பட்டது.
புதுவை அரசோ, முதல்வரோ, அமைச்சரோ தமிழுக்கு எதிரியாக இல்லை. மத்திய அரசு விழா என்பதால் இந்தியில் விளம்பர பதாகை வைக்கப்பட்டது. அரசு பள்ளியில் சிபிஎஸ்இ அமல்படுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் தற்போது 9 அரசு பள்ளிகள் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் எனது தொகுதியை சேர்ந்த 2 கிராமப் புற பள்ளிகளும் அடங்கும்.
பொதுவாக விமான பயணத்தை முதல்வர் ரங்கசாமி தவிர்ப்பார், அதோடு நிதி ஆயோக் நடந்த தினம் சனிக்கிழமை என்பதால், ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் பூஜையில் பங்கேற்பதற்காக கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முதல்வர் பங்கேற்காததால் புதுவைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மத்திய அரசின் நிதி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் புதுவை சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியுள்ளது. அரசு பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். விஏஓ, துணை தாசில்தார் உட்பட 486 பணியிடங்கள் நிரப்ப துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இன்னும் 6 மாதத்தில் 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் புதுவையில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்” என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார்.