மடப்புரம் கோயில் காவலாளி மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா, எந்த குற்ற உணர்வும் இன்றி திண்டுக்கல் அரசு கல்லூரிக்கு வந்து செல்வதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார், தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மரணமடைந்தார். இவர் மீது புகார் கொடுத்த நிகிதா, திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராக பணிபுரிந்து வருபவர்.
2 தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு வருகை தந்து மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார். எந்த குற்ற உணர்வும் இன்றி திண்டுக்கல் அரசு கல்லூரிக்கு நிகிதா வந்து செல்வதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது?
நிகிதா மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை. அவர் ஒன்றுமே செய்யாதது போல் இயல்பாக வந்து செல்கிறார். இவர் கொண்டு சென்ற நகை உண்மையிலேயே காணாமல் போனதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவரது செயல்பாட்டை எப்படி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. மாநில அரசு ஏன் இவர் மீது குறைந்தபட்ச விசாரணை கூட நடத்தவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. வலுவான பின்புலத்தில் அவர் உள்ளதாகவே தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.