திருப்புவனம்: தமிழகத்தில் காவல் துறை காவு வாங்கும் துறையாக மாறி வருகிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடினார். மேலும், அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை முதலில் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியது: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொன்றுள்ளனர். காவல் துறையினர் மமதையில் இருக்கக்கூடாது. போலீஸ் எப்படி இருக்க வேண்டும் என அடையாளமாக இருந்தவர் விஜயகாந்த். காவல் துறை வெட்கப்படும் நிலைக்கு இந்தக் கொலை நடந்துள்ளது.
தமிழக காவல் துறை என்பது காவு வாங்கும் துறையாக மாறியுள்ளது. மக்களை வஞ்சிக்கும் துறையாக, ஏமாற்றும் துறையாக, லஞ்சம் ஊழல் நிறைந்த துறையாக மாறியுள்ளது. கொலை வழக்கில் கண்துடைப்பாக 5 போலீஸாரை கைது செய்துள்ளனர். உண்மை நிலை மக்களுக்குத் தெரிய வேண்டும். நீதிபதிகள் உண்மையைக் கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இனிமேல் யாரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொலை செய்வது தடுக்க வேண்டும்.
வரதட்சிணையால் தமிழகம் முழுவதும் 4 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சியில் 24 லாக்-அப் கொலைகள் நடந்துள்ளன. இதேபோல் தூத்துக்குடியில் நடந்தபோது வானத்துக்கும் பூமிக்கும் குதித்த திமுக கூட்டணியில் இருப்பவர்கள் தற்போது வாயைத் திறக்கவில்லை. கூட்டணி என்றால் மக்கள் பிரச்சினை முக்கியமில்லையா? உங்களுக்கு வாக்களித்தவர்கள் முக்கியமில்லையா?
தமிழக முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாயாரிடம் போனில் ‘சாரி… மா’ என்று பேசுகிறார். ‘சாரி மா’ என்றால் உயிரிழந்த மகன் உயிருடன் வந்து விடுவாரா? காவல் துறை முதல்வர் கையில் உள்ளது. இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். முதலில் நிகிதா என்ற பெண்ணை காவல் துறையும் நீதியரசர்களும் விசாரிக்க வேண்டும்.
கள்ளச்சாராயம், கஞ்சா என தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி வருகிறது. தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கிறது. அடுத்து ஆட்சிக்கு வருவது பற்றி கவலைப்படும் தமிழக முதல்வர் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம்தான். யாருக்கும் பாதுகாப்பில்லை என்ற முறையில் ஆட்சி நடக்கிறது. லத்தியை போலீஸ் கையிலிருந்து வாங்கினால்தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும். காவல் துறையின் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
தமிழகத்திலிருந்து மதுக்கடைகள் ஒழித்தால்தான் விடிவுகாலம். நல்ல மாற்றத்தை அடுத்த தேர்தலில் தாருங்கள். திமுக ஆட்சியின் அராஜகங்கள் மாற வேண்டும். பெண்கள் நினைத்தால் மாற்றத்தை புரட்சியை ஏற்படுத்த முடியும். அஜித்குமார் குடும்பத்தினருக்கு நீதி, நியாயம் வேண்டும். கொலைக் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். காவல் துறை அராஜக போக்கை கைவிட வேண்டும்” என்று அவர் பேசினார்.