சென்னை: பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, திரையரங்குகளில் பிரதமர் மோடி பிறந்தநாள் சிறப்பு குறும்படத்தை திரையிட தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் மோடி தனது 75-வது பிறந்தநாளை நாளை (17-ம் தேதி) கொண்டாடுகிறார்.
இதையொட்டி, தமிழக பாஜகவினர் அவரது பிறந்த நாளை சேவை இருவார நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, படகு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரதமர் மோடியின் சாதனைகள், தியாகங்கள் குறித்த ஒரு மணி நேர குறும்படத்தை திரையிட பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக, குறிப்பிட்ட திரையரங்குகளை செப்.17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முன்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி பிறந்தநாள் சிறப்பு திரைப்படத்தை பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் அவர்கள் குடும்பத்துடன் இலவசமாக திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேவை இருவார நிகழ்ச்சியில் ரத்த தான முகாம்கள், மருத்துவ பரிசோதனைகள், தூய்மை இயக்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சாரங்கள், கண்காட்சிகள், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.
இளைஞர்களை ஈடுபடுத்தும் வகையில், சென்னையில் 21-ம் தேதி மோடி விகாஸ் மாரத்தான் நடத்தப்பட உள்ளது. முக்கியமாக, 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் குறிப்பிட்ட திரையரங்குகளில் சிறப்பு திரைப்படம் திரையிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.