சென்னை: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் 3-ம் இடம் பெற்ற குகேஷ்ஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பகிர்வில், “நார்வே கிளா சிக்கல் செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த குகேஷை நினைத்து பெருமைப்படுகிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் சதுரங்க எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. உலக சாம்பியனாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இருப்பினும் தனது திறமையால், அறிவுக்கூர்மையால், கடின உழைப்பால் 3-வது இடம் பிடித்திருப்பதால் இந்தியர்கள் பெருமை அடைகிறார்கள். இந்தியாவின் விளையாட்டுத் துறையின் திறமையை உலக அரங்கில் பரப்புவதில் தமிழக விளையாட்டு வீரர் குகேஷ் அவர்கள் ஆற்றும் பங்கு போற்றுதலுக்குரியது. குகேஷ் தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்க, வெற்றி பெற ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் பரிசுகள் வழங்கி, பாராட்டி, துணை நிற்க வேண்டும்.