சென்னை: நாய்களின் பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றபோது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி, நாய்க்கடிகளுக்கான மருந்துகள் இல்லை.
கிராமங்களில் பாம்புக்கடி, நாய்க்கடி பாதிப்புகளுக்கு உள்ளாகும்போது, வட்டார மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தான் வர வேண்டும். ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள 2,256 ஆரம்பசுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனை களிலும் பாம்புக்கடிக்கான ஏஎஸ்வி மருந்து, நாய்க்கடிக்கான ஏஆர்வி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நாய்களின் பெருக்கத்தை குறைப்பது, நாய்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வர் தலைமையில் தலைமை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர், நாய்களின் பெருக்கத்தை குறைக்கவும், பாதிப்புகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.