கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரகம், கல்லீரலை தானம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படுத்தி, இடைத்தரகள்கள், பணத்துக்காக ஒரு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதியை பெற்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற முறைகேடுகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிகளவு முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த முறைகேட்டுக்கு காரணமாக இருந்த தனியார் மருத்த்டுவமனைகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் இவற்றை தாண்டி வேறு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அதே மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடு நடந்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், அலமேடு பகுதியை சேர்ந்த 37 வயது பெண், கணவரை பிரிந்து வசித்து வருகிறார். மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வரும் அவருக்கு, சில லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்த கடனை அடைப்பதற்காக, புரோக்கர்கள் மூலமாக, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில், பேரம் பேசி, அப்பெண்ணின் கல்லீரலில் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுநீரக அறுவை முறைகேட்டை தொடர்ந்து கல்லீரல் முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்திருப்பது, மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது. இந்த சம்பவத்தையும் விசாரிக்க, ஏற்கெனவே அம்மாவட்டத்தில் சிறுநீரகம் தொடர்பாக விசாரணை நடத்திய, ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக சுகாதார திட்ட இயக்குநருமான வினித் தலைமையில் விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “கல்லீரல் முறைகேடு தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2 புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது போல இதற்கு யார் காரணம் என்பதை ஆராய்ந்து, காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டிருந் தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.