விழுப்புரம்: மகன் அன்புமணி கூட்டிய பொதுக்குழு குறித்த கேள்விக்கு நான் சொல்வதற்கு ஏதும் இல்லை என விரக்தியுடன் கூறிவிட்டு பூம்புகார் மாநாட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆக. 9) புறப்பட்டு சென்றார்.
பாமக தலைவரான மகன் அன்புமணிக்கு கடிவாளம் போட நினைக்கும் நிறுவனர் ராமதாஸின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மகன் அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராமதாசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (ஆக. 8) இரவு தள்ளுபடி செய்தது. மேலும் பொதுக்குழுவை நடத்தவும் அனுமதி வழங்கியது.
இதையடுத்து மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஆக. 9) நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் ‘பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ், பொது செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா’ ஆகியோர் மேலும் ஓராண்டுக்கு பதவியில் நீடிப்பார்கள் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பூம்புகாரில் நாளை(10-ம் தேதி) நடைபெற உள்ள வன்னிய மகளிர் பெருவிழா மாநாட்டுக்கு, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(ஆக. 9) பிற்பகல் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் கூறும்போது, “நான் சொல்வதற்கு ஏதுமில்லை. பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் பூம்புகார் மாநாட்டுக்கு வாருங்கள். வேறொன்றும் சொல்வதற்கு இப்போது இல்லை” என்றார். அவரிடம் அன்புமணி கூட்டிய பொதுக்குழு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல், ஓட்டுநரை காரை இயக்குமாறு கூறி, புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையில் பூம்புகார் புறப்பட்டு சென்ற ராமதாசின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடி சிகிச்சை அளிப்பதாக, தனியார் மருத்துவமனையில் பிரத்யேக ஆம்புலன்ஸ் ஒன்று உடன் சென்றுள்ளது. அன்புமணியின் பொதுக்குழு விவகாரத்தில், பேச்சுவார்த்தைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அழைப்பு விடுத்தபோது, உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை முன் வைத்து, காணொலியில் ராமதாஸ் நேற்று ஆஜரான நிலையில், அவருடன் ஆம்புலன்ஸ் பயணித்துள்து குறிப்பிடத்தக்கது.