திருத்தணி: திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. நான் ஆட்சிக்கு வந்தால் மரத்தை வெட்டினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. திருத்தணி அருகே அருங்குளம் பகுதியில் உள்ள மனிதநேய தோட்டத்தில் மரங்களுக்கு இடையில் மரங்களின் மாநாடு எனும் தலைப்பில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் திருவள்ளூர், திருத்தணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இது மரங்களுக்கான மாநாடு என்று சொல்வதை விட உயிர் காற்றை தருகிற தாய்க்கு நன்றி சொல்லும் மாநாடு என்றுதான் கூற வேண்டும். இந்த காட்டில் புலிகள் நுழைந்ததும், ஒரு அணில் கூட கண்ணில்படவில்லை, அணில்களுக்கும் சேர்த்து தான் காடு வளர்க்க நாங்கள் போராடுகிறோம். வாக்குக்காக இருப்பவர்கள் இதுபோன்ற மாநாட்டை நடத்தமாட்டார்கள்.
தூய காற்றுக்கு ரூ.4,500 கோடி: காடுகளை அழித்து விரைவாகச் செல்ல சாலை அமைத்த அரசுகள், தூய காற்றுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கியுள்ளனர். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று சொல்வார்கள் ஆனால் எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு மரம் கூட நடமாட்டார்கள். நாம் மரம் வளர்க்க வேண்டும் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று யோசிப்போம். நான் ஆட்சிக்கு வந்தால் மனிதனை வெட்டினால் தண்டனை என்பதுபோல மரத்தை வெட்டினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மனிதனின் பேராசை என்ற பெரும் தீ தான் மரங்களை எரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.