சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, எலியட்ஸ் கடற்கரையில், அரசு மனநல மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட “உலக தற்கொலை தடுப்பு வாரம்” நிகழ்ச்சியில் தலைமை தாங்கி தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்று, விழிப்புணர்வு உரையாற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகித்து, விழிப்புணர்வு பதாகை ஏந்தி மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்றார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தற்கொலைகள் நிகழ்ந்திருக்கும் ஆண்டாக இருந்திருக்கிறது. கோவிட் பேரிடர் காலத்திற்கு பிறகு, தொழிலில் தோல்வி, கல்வி கற்க இயலாமை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினாலும், பொதுமக்கள் கோவிட் பாதிப்புகளில் இருந்தது போன்ற காரணங்களினாலும் மனச்சுமைகள் தற்கொலைக்கு பல வகைகளில் காரணமாக இருந்து, 19,000 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.
முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை தற்கொலைக்கான எண்ணங்களை தடுப்பதற்கும், தற்கொலைகளை தடுப்பதற்கும் அறிவுறுத்திய காரணத்தினால் தமிழ்நாட்டில் மிக எளிதாக தற்கொலை செய்து கொள்வதற்கு மிக எளிதில் கிடைக்கிற பொருள்கள் குறிப்பாக சானப்பவுடர், எலி கொள்வதற்கான மருந்து (Rat Poison) ஆகியவற்றிற்கு தடை விதிப்பது என்று முதல்வர் உத்தரவிட்டு, அதனடிப்படையில் வேளாண்மைத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் துறை, தொழில்துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் சானிப்பவுடருக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் சானிப்பவுடர் மூலம் தற்கொலை என்பது பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சானிப்பவுடர் எங்கெயும் கிடைப்பதில்லை என்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் Rat Poison என்று சொல்லக்கூடிய எலி மருந்து விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, அதனை விற்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்து நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது.
2001 ஆம் ஆண்டு 19,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் அதில் 19 வயது முதல் 30 வயதிற்குள்ளான இளைய சமுதாயத்தினர் அதிகம் பேர் இருந்தார்கள் என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. எனவே இதனை தடுப்பதற்குதான் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் “மனம்“ என்கின்ற மனநல மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டு மருத்துவம், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று தற்கொலையோடு சேர்த்து, போதை தடுப்பு விழிப்புணர்வு, போதைக்கு எதிரான விழிப்புணர்வு என்கின்ற வகையில் அமைப்புகள் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 25 இடங்களில் தமிழ்நாட்டில் போதை தடுப்பு மையங்கள் பெரிய அளவில் பயன்தந்துக் கொண்டிருக்கிறது. போதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி பல்லாயிரக்கணக்கான பேர் மறுவாழ்வு பெற்று வருகிறார்கள்.
முதல்வர் வழிகாட்டுதலோடு, “நட்புடன் உங்களோடு” என்கின்ற தலைப்பில், ஒரு புதிய மனநல சேவை 2022 அக்டோபர் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான தொலைபேசி எண் 14416 ஆகும். இதன்மூலம் ஏறத்தாழ 1.5 இலட்சம் அழைப்புகள் பெற்று மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த அரசு பொறுப்பேற்றபிறகு, 104 எனும் மருத்துவ தகவல் மையம் தொடங்கப்பட்டது. இந்த எண்ணில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவ, மாணவியர்களுக்கும், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவ, மாணவியர்களுக்கும் ஆண்டு தோறும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டும் கூட தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1,35,715 பேர். அதில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களின் எண்ணிக்கை 59,534 பேர். தவறிய இந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 7,92,494 பேர், தேர்வில் தவறியவர்கள் 39,352 பேர், இந்த மாணவர்களுக்கு கூட மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றவில்லை என்று சொல்வது மக்கள் மனதில் எப்போதும் நிலைக்காது என்பது அவருக்கே தெரியும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர் சொல்லி இந்த திட்டம் செயல்படுத்தவில்லை. இன்றைக்கு 1.15 கோடி தாய்மார்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு பயன்பெற்று வருகிறார்கள். தினந்தோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் விடியல் பயணம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
அதாவது அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் என்கின்ற திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் எனும் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உயர்கல்வி செல்பவர்களின் எண்ணிக்கை 29% ஆக உயர்ந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 53% ஆக உயர்ந்திருக்கிறது.
விஜய் போன்றவர்கள் எல்லாம் இதையெல்லாம் மறக்க கூடாது. பொருளாதார வளர்ச்சி 14 வருடங்களுக்கு முன்னாள் 13.12 என்பது பொருளாதார வளர்ச்சி, அப்போது கருணாநிதி முதலமைச்சர். அதன்பிறகு 10 வருடம் எத்தனை சதவிகிதம் இருந்தது, தற்போது ஒன்றிய அரசு கணக்கெடுத்ததலில், 6 மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் பெயரே இல்லை.
குஜராத், கோவா போன்ற மாநிலங்கள் இந்த பட்டியலில் இடம் பெறவே இல்லை. இந்தியா முழுமைக்கும் பொருளாதார வளர்ச்சி என்பது 6.5% தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 11.19% ஆகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 மடங்கு அதிகம். விஜய் போன்றவர்கள் இது குறித்து படித்து தெரிந்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.