சென்னையில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம் என்று அவர் தெரிவித்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐமா) சார்பில் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியான ‘ஆக்மி 2025’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்கு கண்காட்சி அமைக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவர் பேசியதாவது:
நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம். அதில் குறிப்பிடும்படியாக, இந்திய அளவில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் 2.47 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 14 தொழிற்பேட்டைகள் உருவாகியுள்ளன.
மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் முதல் இடத்தையும், ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 2-ம் இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளது.
நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட 14.90 லட்சம் பெண் தொழிலாளர்களில் 6.30 லட்சம் பேர் (42 சதவீதம்), தமிழகத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். கடந்த 2024-25-ம் ஆண்டில் 30.50 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்து, இந்திய அளவில் தமிழகம் 3-ம் இடம் பிடித்துள்ளது. சுய வேலைவாய்ப்பு திட்டங்களின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 59,915 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.2,031 கோடி மானியத்துடன் ரூ.5,210 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடன் உத்தரவாத திட்டம் மூலம் 42,278 எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.7,578.53 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் இத்துறைக்கு ரூ.1918.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரூ.3617.62 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் எம்எஸ்எம்இ துறைக்கு இதுவரை ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக, ‘ஐமா’ தலைவர் சதீஷ்பாபு பேசும்போது, ‘‘அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மூலதன உற்பத்திகள், வாகன உதிரி பாகங்கள், பொறியியல் பொருட்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஆனால், தொழிற்பேட்டையில் போதிய இடவசதி இல்லை. எனவே, இதன் அருகே 50 கி.மீ. சுற்றளவுக்குள் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் ‘ஐமா’ உறுப்பினர்களுக்காக பிரத்யேக தொழிற்பேட்டையை அரசு உருவாக்கி தரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்வில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செயலர் அதுல் ஆனந்த், சிட்கோ தலைவர் ஆ.கார்த்திக், கவுரவ பொதுச் செயலாளர் கே.தவமணி, ஆக்மி கண்காட்சி தலைவர் பி.எஸ்.ரமேஷ், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த 5 நாள் கண்காட்சி வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.