சென்னை: நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:
பிரதமர் மோடி: தேச சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப் போதும் நினைவுக்கூரப்படுவார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். கருணாநிதி மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். என் மீதும் தனிப்பட்ட முறையிலும் அன்பு காட்டி வந்தார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: கண்ணியமான பேச்சும், கனிவான குணமும் கொண்டவர். தனது வாழ்நாளை தேசத்துக் காகவும், சமூக நலனுக்காகவும் அர்ப்பணித்தவர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவர் இல.கணேசன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: பொதுவாழ்க்கையில் சிறப்புடன் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: எளிமையான மனிதர். அவரது மறைவு தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மிகச்சிறந்த பண்பாளர். நாடு ஒரு சிறந்த தேசியவாதியை இழந்துவிட்டது.
விசிக தலைவர் திருமாவளவன்: கருத்து, கொள்கை முரண்பாடு இருந்தாலும் என் மீது அன்பு காட்டியவர் இல.கணேசன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு விழா நடத்தியபோது, அழைப்பு இல்லாமலே நேரில் வந்து வாழ்த்தி விட்டு சென்றார். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
மேலும், துணை முதல்வர் உதயநிதி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரி வித்துள்ளனர்.