சென்னை: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவருடைய தோழி சுபாஷினி தன்னிலை விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தானும் கவினும் உண்மையகவே காதலித்ததாகவும். இந்தக் கொலையில் தனது பெற்றோருக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். கவினின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தாயும் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் கவின் தோழியின் வீடியோ வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர். அவரது பெற்றோரான சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன், நெல்லை மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாய் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், கவினின் தோழி சுபாஷினி வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர், “நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம். நாங்கள் செட்டில் ஆக கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. எங்களைப் பற்றி சுர்ஜித் என் தந்தையிடம் சொல்லியுள்ளான். ஆனால், என் அப்பா என்னைக் கூப்பிட்டுக் கேட்டபோது, நான் கவினை காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், கவின் செட்டில் ஆக கொஞ்சம் காலம் தேவை, அதனால் வீட்டில் கொஞ்ச நாள் கழித்துச் சொல் என்று கேட்டான்.
இதற்கிடையில், கவினிடம் என்னை பெண் கேட்டுவருமாறு சுர்ஜித் சொல்லியுள்ளான். அவர்களுக்குள் என்ன கான்வர்சேஷன் நடந்தது என்று எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால், “நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால்தான் என் எதிர்காலத்தை நான் பார்க்க முடியும்” என்று சுர்ஜித் சொன்னது தெரியும். அதன்பிறகு 27-ம் தேதி கவின் வருவான் என்றே எனக்குத் தெரியாது. நான் அவனுடைய அம்மா, மாமாவைத் தான் அன்று பார்த்துப் பேசினேன். அவர்களின் சிகிச்சைக்கான உதவிகளில் தான் கவனம் செலுத்தி வந்தேன். அதற்குள் இப்படி நடந்துவிட்டது.
எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்பது எங்களுக்குத்தான் தெரியும். எதுவுமே தெரியாமல் பலரும் பலவிதமாகப் பேசுகின்றனர். எங்களுடைய உறவு பற்றி நிறைய பேசுகிறார்கள். என் தந்தை, தாய் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் தண்டனை பெற வேண்டும் என்று நினைப்பது தவறு. அவர்களை விட்டுவிடுங்கள். என்னுடைய உணர்வுகள் தெரியாமல் என்னென்னவோ பேசுகிறார்கள். இனியும் எங்களைப் பற்றிப் பேசவேண்டாம்” என்று கூறியுள்ளார்.