சென்னை: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது வேதனைக்கு உரியது. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்த க்கது. கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 11 மீனவர்கள் பாதிக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக மீனவர்களின் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி அவர்களின் மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, மீன்கள், படகின் எஞ்சின் மற்றும் தங்கச் செயினைப் பறித்துச் சென்றது அராஜகத்தின் உச்சம். இதனால் நாகை மாவட்ட மீனவக் குடும்பங்கள் வேதனை அடைந்துள்ளனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் அவ்வப்போது நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு, வருவாயை இழந்து, நஷ்டத்தில் வாழ்கிறார்கள். இச்சூழலில் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவர்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக கடலில் மீன்பிடிக்க நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப் பட்டது சம்பந்தமாக மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுத்து தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.