நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமின் மகன் சிவமூர்த்தி (47). இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கையான பத்மினியின் மருமகன் ஆவார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி காலை 11 மணிக்கு கோவை செல்வதாக கூறிச் சென்ற சிவமூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை கோவை மாவட்டம், கணபதி மாநகரைச் சேர்ந்த விமல் (39), தேக்கம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25), கவுதம் (25), மூர்த்தி (40) ஆகியோர் சேர்ந்து, காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2021-ம் ஆண்டு 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் சுமார் 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. இந்தநிலையில், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் 4 பேர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நீதிபதிகள் நீதிபதிகள் எம்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன். எஸ்.பரணிதரன் ஆகியோரும், காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தமோதரன் ஆஜராகி வாதிட்டனர். 4 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது. தண்டனையை நிறுத்தி வைக்கக் கூடாது என்று மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணையின் போது வழங்க வேண்டிய இடைக்கால நிவாரணம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியுள்ள ன. அந்த தீர்ப்புகளின்படியும், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் இயற்றப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையிலும் மனுதார்ரகளுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்கிறோம்.
எனவே, மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கிறோம். அவர்களுக்கு ஜாமீனும் வழங்குகிறோம். 4 பேரும் ரூ. 10 ஆயிரமும், அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதமும் வழங்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை முடியும் வரை, ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை திருப்பூர் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராக வேண்டும். என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.