சென்னை: நல்ல, திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது உண்டு என சென்னையிலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலாகி செல்லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கும், விவேக்குமார் சிங் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா தலைமையில் நடைபெற்றது.
இடமாறுதலாகி செல்லும் இரு நீதிபதிகளையும் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாழ்த்திப் பேசுகையில், “சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த பணியிடங்கள் 75. கடந்த 7 மாதங்களில் மட்டும் 12 நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது 2 நீதிபதிகள் இடமாறுதலில் செல்கின்றனர். தற்போது 56 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். 19 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
துளியும் மகிழ்ச்சி இல்லை: நீதிபதி விவேக்குமார் சிங் நன்றி தெரிவித்து பேசுகையில், “பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிவிட்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலில் செல்வதில் எனக்கு துளியும் மகிழ்ச்சி இல்லை.
எதற்காக என்னை அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னைக்கு மாற்றினார்கள் என்பதும், தற்போது சென்னையிலிருந்து மத்திய பிரதேசத்துக்கு மாற்றியுள்ளார்கள் என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் சென்னையில் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமானது. அந்த நீங்காத நல்ல நினைவுகளுடன் மத்திய பிரதேசம் செல்கிறேன்” என்றார்.
இதேபோல ஆந்திராவுக்கு செல்லும் நீதிபதி பட்டு தேவானந்த் பேசுகையில், “நீதிபதிகள் இடமாற்றம் என்றாலே அவர்கள் மீது ஏதாவது குறை கண்டுபிடிப்பதும், ஊழல், வேண்டப்பட்டவர்களுக்காக தீர்ப்பு போன்றவற்றுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கருதும் மனப்பான்மை பெரும்பாலும் உள்ளது.
ஆனால் நல்ல, திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது உண்டு. இவ்வாறு அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுபவர்களுக்கு பல உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் கிடைக்கும். அவர்கள்தான் பின்னாளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் பணியமர்த்தப்படுகின்றனர்.
சிறப்பான அனுபவம்: அந்த வகையில் எனக்கும் மிகச்சிறப்பான அனுபவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கிடைத்தது. யாருக்கும், எதற்கும் பயமின்றி துணிச்சலுடன் எனது பணியை நேர்மையுடன், நியாயமாக செய்துள்ளேன் என நம்புகிறேன். எனது சொந்த மாநிலத்துக்கு என்னை இடமாறுதல் செய்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எனது நன்றி” என்றார்.
முன்னதாக நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், வழக்கறிஞர் எம்.பழனிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.