திருத்தணி: “நல்லகண்ணு பிறந்து வாழும் மண்ணில்தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான். நீ பின்னாடி போய் நிற்கிறாய். கலையை போற்று, கொண்டாடு. அதை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. திருத்தணி அருகே அருங்குளம் பகுதியில் உள்ள மனிதநேய தோட்டத்தில் மரங்களுக்கு இடையில் ‘மரங்களின் மாநாடு’ எனும் தலைப்பில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் திருவள்ளூர், திருத்தணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இது மரங்களுக்கான மாநாடு என்று சொல்வதை விட உயிர் காற்றை தருகிற தாய்க்கு நன்றி சொல்லும் மாநாடு என்றுதான் கூற வேண்டும். இந்த காட்டில் புலிகள் நுழைந்ததும், ஒரு அணில் கூட கண்ணில்படவில்லை, அணில்களுக்கும் சேர்த்துதான் காடு வளர்க்க நாங்கள் போராடுகிறோம். வாக்குக்காக இருப்பவர்கள் இதுபோன்ற மாநாட்டை நடத்தமாட்டார்கள்.
காடுகளை அழித்து விரைவாகச் செல்ல சாலை அமைத்த அரசுகள், தூய காற்றுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கியுள்ளனர். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று சொல்வார்கள் ஆனால் எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு மரம் கூட நடமாட்டார்கள். நாம் மரம் வளர்க்க வேண்டும் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று யோசிப்போம்.
மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான். புவி வெப்பமாவதுதான் இதற்கு காரணம் பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருகட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியையே நம்மால் கடந்த காலத்தில் தாங்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால், பூமி பேரழிவை சந்திக்கும்.
நான் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், ஒவ்வொரு குழந்தையும் மரம் நடவேண்டும் என சொல்வேன். அதுபோல், பள்ளி மாணவனொருவன் பத்து மரங்கள் நட்டால் அவனுக்கு தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்குவேன். 100 மரங்கள் நட்டால் ‘சிறந்த தமிழ் தேசிய குடிமகன்’ என விருதும், பாராட்டு சான்றும் வழங்குவேன். இந்த விருது பெறுவோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும், 1,000 மரம் நட்டால் அவரது இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் மக்கள் மரம் நடுவதற்கு ஊக்கத்தொகை வழங்குவேன்.
எந்த வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலும் வைப்புத்தொகையாக ரூ.5,000 போடுவேன். அவள் படித்து மண வயதை எட்டிய போது, ரூ.10 லட்சத்தை கையில் கொடுப்பேன். படிக்கும் போது, பிள்ளைகளிடம் மரம் வளர்ப்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவேன்.
சொந்த வீடாகவே இருந்தாலும் அங்குள்ள மரத்தை வெட்டவேண்டுமென்றால், என்னை கேட்க வேண்டும். கிளையை வெட்டினால்கூட, அது சக மனிதனின் கையை வெட்டுவதற்கு சமம் என்பதால், அக்குற்றத்திற்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுப்பேன். நான் ஆட்சிக்கு வந்தால் மனிதனை வெட்டினால் தண்டனை என்பதுபோல மரத்தை வெட்டினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மனிதனின் பேராசை என்ற பெரும் தீ தான் மரங்களை எரிக்கிறது. பூமியை சமநிலைப் படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானது என்பது அறிஞர்களின் கருத்து. ஒரு மரத்தை நட்டாலே ஆண்களும் தாயாக முடியும். ஒரு மரத்தை வெட்டினால், அருகில் உள்ள மரம் பயந்து பூக்காது, காய்க்காது. மரத்திடம் பேசினால் நன்றாக பூக்கும், காய்க்கும், வளரும். இதை நான் சொன்னால் விமர்சிக்கிறார்கள். ஆனால் சூர்யா சொன்னால் பாராட்டுகிறார்கள்.
நல்லகண்ணு பிறந்து வாழும் மண்ணில் தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான். நீ பின்னாடி போய் நிற்கிறாய். கலையை போற்று, கொண்டாடு. அதை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும். ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூட்டம் இருக்கிறது. இந்த மூன்றுக்கும் இணையான போதை திரைப்போதை. அதுக்கு எதிராக ஒருத்தரும் பேசுவதில்லை. நடித்தால் நோட்டைத் தருவோம், நடிப்பதை நிறுத்தினால் நாட்டைத் தருவோம், என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?.
நான் மரத்தை கட்டிப்பிடித்து, பேசியபோது சிரித்தார்கள். ஆனால், வெளிநாட்டுக்காரர்கள் கட்டிப்பிடித்தபோது ரசித்தார்கள். இவர்களுக்கு எது சொன்னாலும் வெள்ளைக்காரர்கள் சொல்லவேண்டும். இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினால் சீமான் புத்திசாலி என்பார்கள். இது ஒரு நோயாகி விட்டது” என்றார் சீமான்.