சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி. தொகுதிகளில் மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்துவதில் திமுகவினரின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று புகார் தெரிவித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, கோபிநாத், விஜய் வசந்த், ஆர்.சுதா, ராபர்ட் புரூஸ் ஆகியோர் சென்னையில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அப்போது, கனிமொழி எம்.பி.யும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பின்போது, ஒவ்வொரு எம்.பி.க்கும் அவகாசம் கொடுத்து, தொகுதி பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முதல்வர் கேட்டறிந்தார். அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவையும் ஸ்டாலினிடம் வழங்கினர்.
மேலும் திமுக நிர்வாகிகள் யார் பெயர்களையும் குறிப்பிடாமல், “காங்கிரஸ் எம்.பி. தொகுதிகளில் மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்துவதில் திமுகவினரின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை. எம்.பி. தொகுதி நிதியில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு திமுகவினர் ஒத்துழைப்பு தருவதில்லை. மக்களவை தேர்தல் முடிந்து ஓராண்டு ஆகியும், திமுக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட உள்ளாட்சி அமைப்புகள், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அலுவலகம் அமைத்து தரவில்லை. அதனால் திமுக நிர்வாகிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தின் முடிவில், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி.க்களின் தொகுதியில் சிறு சிறு வேலைகள் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக துரிதமாக அதை செயல்படுத்தி முடிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். சில தொகுதிகளில் எம்.பி.க்களுக்கு அலுவலகம் இல்லாதது தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
தொகுதிகளுக்கு என்னென்ன வேண்டும் என்றும் கேட்டார். எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து, அனைத்தும் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. திமுக-காங்கிரஸ் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.