திருநெல்வேலி: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் நெல்லை சந்திப்பில் உள்ள ஓட்டலில் இரவு தங்கினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினத்தையொட்டி, அவரது படத்துக்கு பழனிசாமி நேற்று காலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், நேற்று இரவு நெல்லையில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் பழனிசாமிக்கு 109 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக மற்றும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும், தேர்தல் வியூகம் மற்றும் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று (ஆக. 4) திருநெல்வேலி, நாங்குநேரி, பாளையங்கோட்டை தொகுதிகளிலும், நாளை முதல் 2 நாட்களுக்கு (ஆக. 5 மற்றும் 6) தென்காசி மாவட்டத்திலும் பொதுமக்களிடையே பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் விருதுநகர் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.