சென்னை: தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, தினசரி 3 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்த ஆலோசனை கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை, பொன்.ராதா கிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், மாநில துணை தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், கரு.நாகராஜன், குஷ்பு, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட மூத்த நிர்வாகிகள், அணிப்பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிற்பகலுக்கு பிறகு அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தென் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான பாரம்பரிய வாக்குகளை எப்படி ஒருங்கிணைப்பது, பெண் வாக்காளர்களை எப்படி ஈர்ப்பது, போராட தகுந்த பகுதிவாரியான பிரச்சினைகள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், பேசிய அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் சுற்றுப் பயணத்துக்கு அதிகளவில் கூட்டம் கூடுவதாகவும், தன்னெழுச்சியாக பாஜக நிர்வாகிகளும் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், அக்டோபர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் தினசரி 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் அப்போது அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், தேர்தலை எதிர்கொள்வது, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஒருங்கிணைத்து செல்வது குறித்த பல்வேறு ஆலோசனைகளை மூத்த தலைவர்கள் வழங்கினர். முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அண்ணாமலையை அவரது வீட்டுக்குச் சென்று பி.எல். சந்தோஷ் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பழனிசாமி கடந்த காலக்கட்டத்தில் என்ன நடந்ததோ அதைப்பற்றி தான் பேசியிருக்கிறார். அவர் டெல்லி சென்று வந்த பிறகுதான் எதற்காக சென்றார் என்பது தெரியும்.
எனது சுற்றுப்பயணத்துக்கான திட்டமிடல்களை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சுற்றுப்பயணத்துக்கான தேதி, இடங்கள், பங்கேற்பாளர்கள் உள்ளிட்டதகவல்களை தெரிவிக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.