மதுரை: திண்டுக்கல் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பங்கேற்காத நிலையில், அவர் பெயரைச் சொல்லி கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்ததால் நயினார் நாகேந்திரன் மற்றும் பிற தலைவர்கள் அதிருப்தியடைந்தனர்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டார். நயினார் நாகேந்திரன் தலைவராகி பல மாதங்களுக்கு பிறகு, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில் அண்ணாமலை ஆதரவாளர்கள் பலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அண்ணாமலை பாஜக தலைவராக இல்லாவிட்டாலும் தமிழக சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு எதிரான செயல்பாடுகளை வீடியோ காட்சிகளுடன் பதிவிட்டு பரபரப்பான கருத்துகளை பதிவிட்டு வந்தார். அண்ணாமலை தலைவராக இருக்கும்போது சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக களமாடியவர்கள் பதவி விலகியதும், சமூக வலைதளங்களில் இருந்து விலகிக் கொண்டனர்.
பாஜக பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளுக்கு அண்ணாமலை வரும்போதும், அவர் பேசும்போதும், மற்ற தலைவர்கள் அவர் பெயரை உச்சரிக்கும் போதும் கட்சியினர் அவர் பெயரைச் சொல்லி கேஷங்களை எழுப்பியும், ஆரவாரம் செய்து வந்தனர். இதனால் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவில் உள்ள மற்ற தலைவர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்தச் சூழலில் பாஜக கூட்டணியிலிருந்த ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் அடுத்தடுத்து கூட்டணியிலிருந்து விலகினர். இருவரும் நயினார் நாகேந்திரன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அண்ணாமலையுடன் நட்பு பாராட்டி வருகின்றனர். இதுவும் நயினார் தரப்புக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், பாஜகவில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். நயினார் நாகேந்திரன் தன் மகன் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு பொறுப்பு வழங்கினார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின்போது அண்ணாமலையின் செயல்பாட்டை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதனால் அண்ணாமலை அதிருப்தியடைந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அடுத்த சில நாட்களில் டெல்லியில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காமல் அண்ணாமலை புறக்கணித்தார்.
இதனால், அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறுகிறார், தனிக் கட்சி தொடங்கப் போகிறார் என தகவல் வெளியான நிலையில் அடுத்த சில நாட்களில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் சந்தோஷ் சென்னை வந்தார். அவர் அண்ணாமலையை அவர் வீட்டுக்கே சென்று சமாதானப்படுத்தி சென்னைக் கூட்டத்திற்கு கூடவே அழைத்து வந்தார். கூட்டத்துக்கு பிறகு நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம் குறித்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில், திண்டுக்கல் கொடை ரோட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளை சேர்ந்த பாஜக பூத் கமிட்டி மாநாடு அறிவிக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என முதலில் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப நிர்மலா சீதாராமனும் மாநாட்டுக்கு முதல் இரு நாட்கள் மதுரை, நெல்லை, விருதுநகரில் தான் இருந்தார். இதனால் பூத் கமிட்டி மாநாட்டுக்கு அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதனால் தேசிய தலைவர்கள் பங்கேற்காமல் திண்டுக்கல் பூத் கமிட்டி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த்மேனன், இணை பார்வையாளர் சுதாகர்ரெட்டி பங்கேற்றனர். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இருப்பினும் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அண்ணாமலை பெயரை சொல்லி கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். தமிழிசை சவுந்தர்ராஜன், ராம.சினிவாசன் பேசினர். இறுதியாக நயினார் நாகேந்திரன் பேசினார். அவர் பேசத் தொடங்கியதும் மாநாட்டில் பங்கேற்றவர்கள் வெளியேறத் தொடங்கினர்.
அண்ணா பிறந்த நாளின்போது அவரை வாழ்த்தி சமூக வலைதளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டதை பாஜகவில் பலர் விமர்சித்த நிலையில், மாநாட்டில் எம்ஜிஆரை புகழ்ந்ததை கட்சியினர் ரசிக்கவில்லை. திண்டுக்கல் பூத் மாநாட்டில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மாநாடு முழுவதும் அண்ணாமலைக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் நயினார் நாகேந்திரனும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.