தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அடுத்த விக்கெட்டாக வெளியேறியிருக்கிறார் டிடிவி தினகரன். தான் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்று அவர் சொன்னதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது. மேலும், அவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இப்போது பாஜகவின் ஒரே இலக்கு. இதன் காரணமாகவே, பல்வேறு வியூகங்கள் மூலமாக அதிமுகவை வளைத்து கூட்டணிக்குள் கொண்டு வந்தார்கள். இதையெல்லாம் விட முக்கியமாக, தங்கள் கட்சியை எப்போதும் லைம்லைட்டில் வைத்திருந்த அண்ணாமலையை கூட தலைவர் பதவியிலிருந்து மாற்றினார்கள்.
அடித்துப் பிடித்து அதிமுகவோடு கூட்டணியை உறுதி செய்தாலும், அதன்பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து சேதாரம்தான் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. குடும்ப சிக்கலை முன்வைத்து பாமக இப்போதுவரை கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. தேமுதிகவோ எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டது. தொடர் புறக்கணிப்பால் ஓபிஎஸ் சில வாரங்களுக்கு முன்னர் கழண்டுகொண்டார். டிடிவி தினகரனும் வெளியே வந்துவிட்டார். இப்போது பாஜக – அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் மட்டும்தான் உள்ளார். கிருஷ்ணசாமிகூட பழனிசாமியை சாட ஆரம்பித்துவிட்டார்.
நயினாரை தினகரன் ‘டார்கெட்’ செய்வது ஏன்? – தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தினகரன், “நயினார் நாகேந்திரன் ஆணவத்தோடு நடந்துகொள்கிறார். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. இபிஎஸ் மட்டும் இருந்தால் போதுமென நினைக்கிறார்” என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில், “அண்ணாமலைதான் எங்களை ஒருங்கிணைத்தார். அவர் எங்களுக்கு உரிய மரியாதை கொடுத்தார். அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது” என்றும் பேசியுள்ளார். இதுதான் இப்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நயினார் மீதான தினகரனின் வருத்தத்துக்கு காரணமாக சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று… ஓபிஎஸ், பிரதமரை சந்திக்க விரும்பியது குறித்த விவகாரத்தின்போது ஆணவத்தோடு நயினார் பேசினார் என்கிறார். அடுத்ததாக, அதிமுக மட்டுமே போதுமென்ற மனநிலையில், தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அமமுக, ஓபிஎஸ் எங்கள் கூட்டணியில் உள்ளனர் என்று எங்குமே வெளிப்படையாக நயினார் சொல்லவில்லை. அதுபோல, எடப்பாடி பழனிசாமியை சரிக்கட்டி, தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் இணக்கமாக போகச் சொல்லி வலியுறுத்தவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தினகரன் தரப்பால் முன்வைக்கப்படுகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு பதில் சொல்லியுள்ள நயினார், ‘இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவருமே எனக்கு நண்பர்கள் தான். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கவேண்டும். விரைவில் அனைவரும் ஓரணியில் வருவார்கள்’ என்று சொல்லியுள்ளார். மேலும், ‘அண்ணாமலையும் இப்போது இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார்; அப்புறம் எப்படி என்னை குறைகூற முடியும்? அமித் ஷா சொன்னதையே நாங்கள் பின்பற்றுகிறோம்’ எனவும் பதிலடி கொடுத்தார்.
அதே நேரத்தில், தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் நெருக்கமாக இருந்தவர் அண்ணாமலை. எனவே, தமிழக பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்ததால், இவர்களை தூண்டி விடுவதன் மூலம் தனக்கான இமேஜை உயர்த்த அண்ணாமலை கணக்குப் போடுகிறார் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ், தினகரன் அனைவருமே அதிமுகவில் பணியாற்றியவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரே சமூக பின்னணியை உடையவர்கள். எனவே தென் மாவட்டங்களின் தனது இருப்பை வலுவாக்க தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை நயினார் கார்னர் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. தினகரன், ஓபிஎஸ்சை பலவீனப்படுத்துவதன் மூலம், தங்கள் சமூகத்தின் முக்கிய முகமாக மாறவும் நயினார் கணக்கு போடுவதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
கொங்கு மண்டலத்தில் பலம் பெறும் நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை எதிர்த்த அதே ஃபார்முலாவோடு தான், தென் மண்டலத்தில் ஓபிஎஸ், தினகரனுக்கு கட்டம் கட்டி நயினாரும் காய் நகர்த்துகிறார் என சொல்லப்படுகிறது.
தினகரன், நயினார், அண்ணாமலை என முக்கோண விளையாட்டில் மூன்று முக்கிய நகர்வுகள் உள்ளன. ஒன்று, கூட்டணியிலிருந்து வெளிவந்து இபிஎஸ்சை பயமுறுத்துவது. இரண்டாவது, இதனை வைத்து தொகுதி பேரத்தை அதிகப்படுத்துவது. மூன்றாவது, அண்ணாமலையை முன்னிலைப்படுத்துவதன் மூலம் நயினாரின் இமேஜை உடைப்பது. ஏனென்றால் நயினாரின் செல்வாக்கு தென் மாவட்டங்களில் உயருவது, தங்களுக்கு ஆபத்து என நினைக்கிறது ஓபிஎஸ், தினகரன் தரப்பு. இதன் பின்னணியில் அண்ணாமலையின் கைங்கர்யம் இருப்பதாகவும் ஒரு தரப்பு குற்றம்சாட்டுகிறது.
சமீப காலமாக ஓபிஎஸ், தினகரன், தேமுதிக போன்ற கட்சிகள் தவெகவுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக பேசி வருகின்றனர். ஒருவேளை, தவெக கூட்டணி வலுவடைந்தால், அது அதிமுக – பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை உருவாக்கும்.
திமுக அரசை தோற்கடிக்க வேண்டுமானால், பலமான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் தான் இருக்கிறது. எனவே தினகரன், ஓபிஎஸ் போன்றோரை வழிக்கு கொண்டுவருவதும் இவர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்வார்கள் என பார்ப்போம்.