சென்னை: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் நலம் விசாரித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (06.07.2025) ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ‘இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில், 4 இலட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் 2021 டிசம்பர் திங்கள் 18ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
உலக அளவில் ஒரு புகழ் பெற்ற திட்டமாக இது பயன்பெற்று வருகிறது. சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டில் உள்ள 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என்று 723 மருத்துவமனைகளில் உடனடியாக சேர்த்து, சேர்க்கப்பட்ட முதல் 48 மணி நேரத்தில் ரூ.1 லட்சம் அரசின் சார்பில் தந்து அவர்களுடைய உயிரை காப்பாற்றுவது என்கின்ற வகையிலான ஒரு மிகச் சிறந்த திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 ஆகும். முதலமைச்சரால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் என்பது தமிழ்நாட்டில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட அடிக்கடி விபத்துகள் நேர்கின்ற மருத்துவமனைகளாக தேர்ந்தெடுத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி, விபத்து நேர்ந்தவுடன், 8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் இந்த இடத்திற்கு சென்றடைந்து, அவசர மருத்துவ தொழில்நுட்பவியர்களின் உதவியுடன் காயமுற்றவர்களின் உயிர்களை காப்பதற்குரிய முதலுதவிகளை செய்து மருத்துவ உதவிகளை ஆம்புலன்ஸ் வழங்கி உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கின்ற இந்த மகத்தான திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பு, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஏதாவது ஒரு சாலையில் விபத்துகள் நேர்ந்தால், விபத்து நேர்ந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து, முதல் 48 மணி நேரத்தில் அவர்களுக்குரிய முதலுதவிகளை செய்து அரசின் சார்பில் ரூ.1 லட்சம் உதவியுடன் அவர்களது உயிரை காப்பது. அந்தவகையில் ரூ.1 லட்சம் நிதியுதவியோடு, இந்த திட்டம் 3 ஆண்டு காலம் சிறப்பாக வழங்கப்பட்டு வந்தது, 24.12.2024 முதல் தமிழ்நாடு முதலமைச்சரால் ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். அந்த வகையில் தற்போது ரூ.2 லட்சமாக வழங்கப்பட்டு வருகிறது.
4 லட்சமாவது பயனாளி: இந்த அரசு பொறுப்பேற்றபிறகு இதுவரை 3,99,999 என்கின்ற வகையில் ஏறத்தாழ 4 லட்சமாவது பயனாளி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பாரிவாக்கத்தைச் சேர்ந்த 33 வயது மணிகண்டன் என்கின்ற இளைஞர். தனியார் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கால்கள் முறிந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவருக்கான மருத்துவ செலவை இந்த அரசு ஏற்றுக் கொள்கிறது என்கின்ற செய்தியினை சொல்லியிருக்கிறோம்.
மேலும் 4,00,001, 4,00,002, 4,00,003 என்கின்ற பயனாளிகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரவயால் பகுதியைச் சார்ந்த 50 வயது மதியழகன், புரசைவாக்கம் பகுதியைச் சார்ந்த 28 வயது சரண்யா, கோலப்பஞ்சேரி பகுதியைச் சார்ந்த 33 வயது விஸ்வநாதன் ஆகியோரும் வெவ்வேறு சாலை விபத்துகளில் குறிப்பாக இருசக்கர வாகன விபத்து, ஆட்டோ விபத்து என்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் நலம் விசாரிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி 101 சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பிறகு 05.07.2025 வரை 3,99,952 பயனடைந்து இருக்கிறார்கள். அதற்காக இந்த அரசு ஒட்டு மொத்தமாக செலவிட்டிருக்கும் தொகை ரூ.365.02 கோடி ஆகும். அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 3,69,785 பயனாளிகளுக்காக ரூ.313.06 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 30,167 பயனாளிகள் ரூ.51.95 கோடி செலவில் பயனடைந்திருக்கிறார்கள். அந்தவகையில் இந்த திட்டம் மிகச்சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சமாக இருந்தபோது, 3,26,246 பயனாளிகள் ரூ.285.13 கோடி செலவில் பயனடைந்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அதனை ரூ.2லட்சமாக உயர்த்திய பிறகு, 73,706 பயனாளிகள் ரூ.79.89 கோடி செலவில் பயனடைந்திருக்கிறார்கள். அந்தவகையில் இந்த திட்டத்தில் 4 லட்சமாவது பயனாளியை இன்று ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் சிறப்புகளை அறிந்த ஒன்றிய அரசு இதே போன்று ஒரு திட்டமான விபத்து நேர்ந்த 7 நாட்களுக்குள் ரூ.1.5 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் சிறப்பு இன்று இந்தியா முழுமைக்கும் ரூ.1.5 லட்சம் பெற்று பயன்பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 எனும் திட்டம் ஆகும்.
தமிழ்நாட்டில் விபத்து நேர்ந்திருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு அவர்களுக்கு உதவி செய்கிறோம். ஒன்றிய அரசு அறிவித்த திட்டத்தின்படி, காவல்துறை விசாரணை முடிந்து பிறகுதான் அவர்களுக்கு உதவித் தொகை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.வினீத், இ.ஆ.ப., ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு அலுவலர் மரு.தனவேல், இ.ஆ.ப. (ஓய்வு), முதல்வர் மரு.சீனிவாசாராஜ், இணை இயக்குநர் மரு.ரவிபாபு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.