கம்யூனிஸ்ட் கட்சிகளை முதலில் தங்கள் கூட்டணிக்கு இழுத்துப் பார்த்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இப்போது, “கம்யூனிஸ்ட்கள் திமுக-வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டன. தேர்தலுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போய்விடும்” என கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்.
பதிலுக்கு தோழர்களும், “காணாமல் போகப் போவது கம்யூனிஸ்ட்களா அதிமுக-வா என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும்” என்று பழனிசாமியை காய்ச்சி எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் இரா.முத்தரசனிடம் அதிமுக விமர்சனம், திமுக உடனான உறவு, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
யதார்த்த அரசியல் செய்தே பழகிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி, ஐடி விங்க், வார் ரூம் என காலத்துக்கேற்ப தன்னை அப்டேட் செய்திருக்கிறதா?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐடி விங்க் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட சேலத்தில் நடந்த மாநில மாநாடு, ‘காலம் தோறும் கம்யூனிஸ்ட்’ நூல் வெளியீட்டு விழா போன்றவற்றை பொதுமக்களிடம் அதிகளவில் கொண்டு சேர்த்துள்ளது எங்களின் ஐடி விங்க்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இளைஞர்களை தங்கள் கட்சிக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் போது, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அப்படியான முன்னெடுப்புகளை எடுத்ததாக தெரியவில்லையே?
தருமபுரியில், சிபிஐ-யின் இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. அதேபோல் கட்சியில் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து புதிய நிர்வாகிகளாகவும் தேர்வு செய்திருக்கிறோம்.
தேர்தல் செலவுகளுக்காக 2019-ல் திமுக-விடம் நிதி பெற்றதை தற்போது வரை சிலர் விமர்சனம் செய்கிறார்களே… இதனாலேயே அரசின் தவறுகளை கடுமையாக கண்டிக்காமல் தோழர்கள் முட்டுக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் கூட குற்றச்சாட்டை முன்வைக்கிறார்களே?
2019 மக்களவை தேர்தலையொட்டி திமுக-விடம் பணம் பெற்றதற்கான வரவு, செலவு கணக்குகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், இதை திரும்பத் திரும்ப அவதூறாக சொல்லி அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. மக்கள் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கியதை சொல்லியே அரசியல் செய்து வருகிறார்.
2026 தேர்தலுக்கு அவர் எதிர்பார்த்ததைப் போல ஒரு கூட்டணியை அவரால் உருவாக்க முடியாததால், விரக்தியில் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல், வேலைநேரம் அதிகரிப்பு, சாம்சங் ஊழியர்கள் விவகாரம் உள்ளிட்டவற்றில் கடுமையான போராட்டங்களை சிபிஐ முன்னெடுத்திருக்கிறது. இதெல்லாம் பழனிசாமிக்கும் தெரியும். ஆனால் அவர், ‘திமுக ஒழிக’ என்று நாங்கள் கோஷம் போட வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதை நாங்கள் செய்யமாட்டோம்.
தொடர்ந்து மூன்று முறை கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
நான் நகரச் செயலாளராக இருந்து படிப்படியாக மாநிலச் செயலாளர் பதவிக்கு வந்திருக்கிறேன். நான் மாநிலச் செயலாளராக செயல்பட்ட இந்த 10 ஆண்டு காலத்தில் கட்சித் தோழர்கள் அனைவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். மனநிறைவுடன் இருக்கிறேன்.
மாநிலச் செயலாளர் பதவிக்கு தோழர்களுக்குள் கடும் போட்டி இருந்ததால் தான் சேலம் மாநாட்டில் புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடக்காமல் போனதாமே?
இது மிகவும் தவறான கருத்து. சேலத்தில் நடந்த மாநாட்டில் போதிய நேரம் இல்லாததால் ஒரு மனதாக மாநிலச் செயலாளர் தேர்வை ஒத்திவைத்துள்ளோம். மீண்டும் மாநிலக் குழு கூடி நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வு செய்வோம். எங்களது கட்சியில் எந்தப் போட்டியோ குழப்பமோ கிடையாது.
திமுக-வுக்கு ஆதரவளித்த நீங்கள், அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?
இதுவரை அப்படி நினைக்கவில்லை. நாங்கள் ஒரு கட்சியை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கொள்கை ரீதியாக மட்டுமே. திமுக-வை எங்களைப் போல் விமர்சித்தவர்கள் யாரும் இல்லை. பாஜக-வின் வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார். அதனால் அவரை அரசியல் ரீதியாக ஆதரிக்கிறோம்.
திமுக ஆட்சியை ஒரு சில அதிகாரிகள் தான் நடத்துகிறார்கள்… அதனால் சில நேரங்களில் தேவையற்ற சங்கடங்களையும் எதிர்கொள்கிறார் முதல்வர் என்று சொல்வதை ஒத்துக்கொள்கிறீர்களா?
ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் பலவாறாக விமர்சிப்பது வழக்கமானதே. அதற்காக, அதிகாரிகள் தான் ஆட்சி செய்கிறார்கள் என்று கூறுவது எல்லாம் முதல்வர் மீது களங்கத்தை உண்டாக்கும் முயற்சியே தவிர அது உண்மையல்ல. ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் எந்த முதல்வராலும் முடிவுகளை எடுக்க முடியாது. ஆனாலும் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை முதல்வர் தான் தீர்மானிப்பார். காமராஜர், கருணாநிதி போல முதல்வர் ஸ்டாலினும் முடிவுகளை தானே தான் எடுக்கிறார்.
பாஜக உடன் கூட்டணி சேராவிட்டால் அதிமுக கூட்டணிக்கு அணி மாறவும் தோழர்கள் தயாராக இருந்ததாகச் சொல்லப்பட்டதே?
எங்களது கட்சிக்குள் இதுபோன்ற ஒரு விவாதம் நடைபெறவே இல்லை. அரசியலில் நம்பகத்தன்மை அற்ற ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். உதாரணமாக, சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்களுக்கு அவர் செய்த துரோகத்தை சொல்லலாம். அவரை எல்லாம் நம்பி எப்படி கூட்டணிக்குச் செல்ல முடியும்?
தவெக-வின் 2-வது மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கும் விஜய், மாநாட்டின் முகப்பில் அண்ணா, எம்ஜிஆர் படங்களை வைத்திருந்ததையும், மேடையில் பேசும்போது, “எனது அண்ணன் கேப்டன் விஜயகாந்த்” என்று கூறியதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
சிவாஜி – எம்ஜிஆர், ரஜினி – கமல் வரிசையில் விஜய் ஒரு சிறந்த திரைப்படக் கலைஞர். அதனால் அவர் நடத்தும் அரசியல் மாநாட்டுக்கு வரும் கூட்டம் கட்சி ரீதியாக கூடுகிறதா அல்லது அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக கூடுகிறதா? இது அரசியலாகுமா ஆகாதா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திரைப்படத்தில் நடித்தவர், தற்போது பொதுவெளியில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், எம்ஜிஆர், விஜயகாந்த், காமராஜர் போன்ற தலைவர்களின் பெயரை எல்லாம் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
விஜய், ஆட்சியில் பங்கு என்கிறார், பாஜக-வையும் எதிர்க்கிறார். அதனால் அவசியம் ஏற்பட்டால் அவருடன் சிபிஐ கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கலாமா?
ஒரு அரசியல் கட்சியானது தனது கொள்கையை சுட்டிக்காட்டி கூட்டணிக்கு எங்களுடன் வாருங்கள் என்று அழைக்கலாம். ஆனால், அமைச்சர் பதவி தருகிறேன் என்னுடன் வாருங்கள் என்று கூப்பிடுவது அரசியல் அநாகரிகமாகும். கட்சி தொடங்கி 2 மாநாட்டை முடித்துவிட்ட விஜய்யுடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. கட்சிகளுடன் பேசி கூட்டணி சேர்ப்பதற்கான பக்குவம் விஜய்யிடம் இல்லை.
தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டாம் என திருமாவளவன் சொன்னதையும் அப்படி அவர் சொன்னதன் கோணத்தையும் ஏற்கிறதா சிபிஐ?
அடித்தட்டு மக்கள் அதே பணியில் இருக்கக்கூடாது என்பது தான் திருமாவளவனின் நோக்கம். ஆனால், நல்ல நோக்கத்துடன் அவர் சொல்ல வந்த விஷயம் திசை மாறிப்போய்விட்டது.
ஊழல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பதவி பறிபோகும் என்ற மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்ட மசோதாவை ஏன் எதிர்க்க வேண்டும்?
தவறு செய்த அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் குற்றவாளி அல்ல. ஆனால், புதிய சட்டத்தின்படி வேண்டுமென்றே எதிர்க்கட்சி முதல்வர் மீது ஒரு வழக்கைப் போட்டு, 30 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைத்தால் கூட, ஆளுநர் அவரை பதவிநீக்கம் செய்துவிடுவார் என்றால், அது என்ன வகையான ஜனநாயகம்? எதிர்க்கட்சிகளே கூடாது என்று பாஜக விரும்புவதன் தொடர்ச்சி தான் இந்தச் சட்டமும்.
கடந்த முறை கண்ணை மூடிக்கொண்டு திமுக-வுக்கு ஆதரவளித்தீர்கள். அப்படி இல்லாமல் இம்முறை குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆதரவு என்று முடிவெடுக்க வாய்ப்பிருக்கிறதா?
ஏற்கெனவே வகுப்புவாதத்துக்கு எதிரான கூட்டணி என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதால் புதிதாக திட்டம் உருவாக்க அவசியம் எழவில்லை. எங்கள் கூட்டணி 8 ஆண்டுகாலம் நீடிப்பதற்கு கொள்கை மட்டுமே காரணம். வெறும் தொகுதி பங்கீடுகள் அல்ல.
ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்றெல்லாம் திமுக கூட்டணி கட்சிகள் பேச ஆரம்பித்திருக்கின்றன. இந்த விஷயத்தில் சிபிஐ-யின் நிலைப்பாடு என்ன?
இது கூட்டணி ஆட்சி குறித்து பேசுவதற்கான காலம் இல்லை. கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தான் அனைத்துக் கட்சிகளின் ஆசையும். அதில் தவறில்லை. ஆனால், இது பொதுவெளியில் விவாதிக்கக்கூடியது அல்ல. புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்வதால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எண்ணிக்கை குறையுமா கூடுமா என்பதை எல்லாம் அந்தக் கட்சிகள் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.
சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் நேரில் வலியுறுத்திச் சொன்ன பிறகும் முதல்வர் அமைதியாக இருக்க என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதில் சிபிஐ உறுதியாக இருக்கிறது. அதேபோல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் தரவேண்டும். தனிச் சட்டம் இயற்றுவது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.