பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படும் மின்சார ரயில்களின் காலிபெட்டிகளை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைகளில் நிறுத்தி வைப்பதால், அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்வே பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதிலும், குறிப்பாக, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அடிக்கடி பொறியியல் பணி நடைபெறுகிறது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே மூன்று நாட்களுக்கு (ஆக.14,16,18) பொறியியல் பணியால், இவ்வழித் தடத்தில் 17 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை சென்ட்ரலில் உள்ள 5 நடைமேடைகளில் (பிளாட்பாரம்) 3 நடைமேடைகளில், ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில் பெட்டிகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. எஞ்சிய 2 நடைமேடைகளில் மட்டும் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், சென்னை சென்ட்ரலுக்கு மேற்படி நாட்களில் இங்கு வந்தடையும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
குறிப்பாக, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஆக.14-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்பட்ட புறப்பட்ட மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மதியம் 1.50 மணிக்கு வந்தது. ஆனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை காலியாக இல்லாததால், ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள சிக்னலில் நிறுத்தப்பட்டது.
சுமார் 35 நிமிடங்கள் காலதாமதாக அந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத், இன்டர்சிட்டி ஆகிய ரயில்களில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளுக்கு, இந்த ரயில் ஓர் இணைப்பு ரயிலாக உள்ளது.
ஆனால், மின்சார ரயில் தாமதமாக சென்றடைந்ததால், பல பயணிகள் கோவை செல்லும் வந்தே பாரத் மற்றும் இன்டர்சிட்டி ரயிலை தவற விட்டனர். மேலும், சில பயணிகள் விரைவு ரயிலை பிடிக்க வேண்டும் என்ற பதற்றத்தில், குடும்பத்தினருடன் மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் நடந்தே சென்றனர். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதேநிலைதான் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வருவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து திருவள்ளூர், அரக்கோணத்தைச் சேர்ந்த ரயில் பயணிகள் கூறியதாவது: கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் வாரந்தோறும் பொறியியல் பணி நடைபெறுவதால், அன்றைய தினம் அந்த வழித்தடத்தில் ரத்து செய்யப்படும் ரயில் பெட்டிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது.
இதனால், 2 நடைமேடைகளில் மட்டும் சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இவ்வழித் தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் தாமதமாகிறது. ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களை நிறுத்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெளியே யார்டு உள்ளது. அங்கு கொண்டு சென்று நிறுத்தலாம். அல்லது ஆவடியை அடுத்த அண்ணனூர் பணிமனையில் கொண்டு சென்று நிறுத்தலாம்.
ஆனால், அதிகாரிகள் இது குறித்து கருத்தில் கொள்ளாமல், காலி பெட்டிகளை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி, மற்ற ரயில்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால், ரயில் பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, “இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். முக்கிய தடங்களில் ரயில்களின் சேவை குறைப்பு, சிக்னல், தொழில்நுட்ப பிரச்சினையால் ரயில்கள் தாமதமாக இயக்கம் போன்றவற்றால் பயணிகள் அவதிப்படும் நிலையில், ரயில் மேடைகளை ஆக்கிரமிக்கும் காலி பெட்டிகளால் பயணிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.