சென்னை: நடிகர் விஜய்யை சந்தித்து பேசவில்லை என்று ஜாக்டோ-ஜியோ விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ-ஜியோ அமைப்பு, தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் பேரமைப்பாகும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம், பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெறுவது போன்ற கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது. இன்றைக்கும் பழைய ஓய்வூதியம் உட்பட கோரிக்கைகளுக்காக மத்திய , மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வருகிறது.
இது பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் உள்ள சங்கங்கள் தங்கள் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அவர்களின் முடிவாகும். அந்த வகையில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாயவன், தவெக தலைவர் விஜய்யை ஜூன் 13-ம் தேதி சந்தித்து பேசினார்.
ஆனால், ஊடகங்களில் எங்கள் அமைப்பு சார்பில் சந்தித்ததாக செய்திகள் வெளியானது முழுவதும் உண்மைக்கு புறம்பானது. அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம். அந்த நிகழ்வுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.