சென்னை: பிரபல நடிகர் மதன்பாப் (71) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் இசைக் கலைஞராக இருந்தார். தனது சகோதரர் பத்மநாபன் என்ற பாபுவுடன் இணைந்து ‘மதன் – பாபு’ என்ற பெயரில் இசைக்குழுவை நடத்தி வந்தார். இதனால் மதன் பாபு என்று அவரை அழைத்தனர். அதுவே பின்னர் மதன்பாப் ஆனது.
‘நீங்கள் கேட்டவை’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அவர், ‘வானமே எல்லை’ படம் மூலம் அறியபட்டார். தொடர்ந்து, தேவர் மகன், மகளிர் மட்டும், பூவே உனக்காக, கண்ணுக்குள் நிலவு, தெனாலி, பிரண்ட்ஸ், சந்திரமுகி, கிரி உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது இவருடைய தனித்த அடையாளமாகும். சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு?’ நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்பட்டுள்ளார். இவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் அடையாறில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் மறைவுக்கு ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் மதன்பாப்புக்கு சுசீலா என்ற மனைவி, அர்ச்சித் என்ற மகன், ஜனனி என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.