மதுரை: “மக்களுக்கான நலனை பற்றி சிந்திக்காமல் தோல்வி பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: “தமிழகத்தில் மக்கள் விரோத மன்னராட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முழு வன்மத்தையும் அதிமுக மீதும், பொதுச் செயலாளர் பழனிசாமி மீதும் முதல்வர் ஸ்டாலின் கொட்டிக் கொண்டிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்பை, குறைகளை எடுத்துச் சொல்வதுதான் எதிர்க்கட்சியின் பிரதான கடமையாகும். எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ள ஸ்டாலினுக்கு இதுகூட தெரியாதா?
திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பால் அதிமுக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலனை பற்றி சிந்திக்காமல் 24 மணி நேரமும் தூக்காமில்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்திக்கிறார். பழனிசாமி மக்கள் மனதில் நிறைந்துள்ளார். அவரது பிரச்சாரத்தல் திரண்டு வரும் மக்களே அதற்கு சாட்சி. சில காலாவதி தலைவர்கள், அதிமுக வெற்றியை திசைதிருப்ப ஒப்பாரி எழுப்பி வருகின்றனர். அதை காது கொடுக்க கேட்க நமக்கு நேரமில்லை. ஏனென்றால், நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆட்சி மாற்றத்துக்கான காலம் நெருங்கிவிட்டது. அதிமுக பொதுச் செயலாளர் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். ஆளுங்கட்சியினர் உள்ளுக்குள் பயத்துடன் தேர்தலை அணுக தொடங்கிவிட்டனர். ஆனால், வெளியே பயமில்லாதது போல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்பது போல் பேசிக் கொண்டிருக் கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.