சென்னை: தொழில் நிறுவனங்கள், ஊழியர்கள் ‘ஸ்ப்ரீ 2025’ திட்டத்தில் இணைவது குறித்த விழிப்புணர்வு முகாம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்தது. தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பதிவை ஊக்குவிக்க ‘ஸ்ப்ரீ -2025’ திட்டத்தை தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ) தொடங்கியுள்ளது.
இத்திட்டம் குறித்து மாவட்டந்தோறும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏஐஇஎம்ஏ) வளாகத்தில் ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சென்னை மண்டல இயக்குநர் ஏ.வேணுகோபால் தலைமை தாங்கினார்.
துணை இயக்குநர்கள் சதீஷ்குமார், ஸ்ரீனிவாசன், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் டி.சேதுராமன் உள்ளிட்ட தொழில் துறையினர், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் குறித்தும், இத்திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், திட்டத்தில் இணைய எப்படி பதிவு செய்வது, முதலாளிகள், பணியாளர்களுக்கான நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் வேணுகோபால் கூறுகையில், “தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகம் ஸ்ப்ரீ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அனைத்து முதலாளிகளும் தங்களைப் பதிவு செய்துகொள்ள ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அவற்றின் ஊழியர்களை பதிவு செய்துகொள்ளலாம்.
டிச.31-ம் தேதி வரை, ‘ஸ்ப்ரீ -2025’ திட்டம் அமலில் இருக்கும். இதன் மூலம் முந்தைய காலப் பதிவு, தாமதமான பதிவு குறித்த எவ்வித ஆய்வும் இருக்காது. மேலும் எந்த ஒரு பங்களிப்பு தொகையும் கோரப்படாது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து கடைகள், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது அவசியம்” என்றார்.