திருநெல்வேலி: நாங்குநேரி அருகே வீட்டு மின் கட்டணமாக ரூ.1.61 கோடி செலுத்த வேண்டும் என்று மின் வாரியத்திலிருந்து வந்த தகவலால் தொழிலாளி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டி மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி மாரியப்பன். நான்கு பேர் கொண்ட இவரது வீட்டுக்கான மின் கட்டணத்தை கடந்த சில நாட்களுக்குமுன் ஊழியர் ஒருவர் கணக்கீடு செய்துவிட்டு சென்றிருந்தார்.
இதை தொடர்ந்து, மின்கட்டண விவரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்துள்ளது. மின் கட்டணம் ரூ. 1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், மாரியப்பனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக மின்நுகர்வோருக்கு அதிகப்படியான மின்கட்டணம் வந்துள்ளது தெரியவந்தது. தவறான மின் அளவை திருத்தம் செய்து, சரியான மின்அளவு பதிவேற்றம் செய்யப்பட்டு மாரியப்பனின் வீட்டு மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.494 என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.