விழுப்புரம்: காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குடும்பம் குடும்பமாக கார் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் நேற்று முன்தினம் இரவு முதல் புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச் சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல கூடுதலாக 2 வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. மொத்தம் 9 வழித்தடங்களில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டாலும் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை 4 மணி வரை 32 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியை கடந்து சென்றுள்ளன. வழக்கமாக 24 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் கூடுதலாக 8 ஆயிரம் வாகனங்கள் கடந்துள்ளன. இதன் எண்ணிக்கை நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 40 ஆயிரத்தை கடந்தது.