சென்னை: தொடர்ச்சியாக தீ விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மை காலமாக நமது துணை மின் நிலையம், மின்மாற்றிகளில் தீ விபத்துக்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கொடுங்கையூர், வியாசர்பாடி, கயத்தாறு, மதுரை மற்றும் சில விபத்துக்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என்பதை எடுத்துரைக்கிறது.
இதுபோன்ற விபத்துக்கள் மின் விநியோகத்தை பாதிப்பதோடு நிற்பதில்லை. பொதுமக்களின் பாதுகாப்பில் சமரசத்தை உருவாக்குவதோடு, பொதுமக்கள் நம்மை குறைத்து மதிப்பிடுவதாகவும் அமைகிறது. எனவே, தற்போதைய தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தீவிரமாக அமல்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
தீ விபத்து ஏற்படும்போது, தீயை அணைப்பதோடு, மாற்று திட்டங்கள் மூலம் மின்விநியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தோடு சேர்ந்து, துணை மின்நிலையங்கள், மின்மாற்றி அருகே கழிவு பொருட்களை கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.
அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உபகரணங்களை கையில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அவசர காலங்களில் தற்காலிக மின் விநியோகத்துக்கான ஏற்பாட்டைச் செய்திருப்பதை சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து உறுதி செய்ய வேண்டும்.
24 மணி நேரமும் போதிய பணியாளர்கள் இருக்க வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றி, வரும் காலங்களில் விபத்தை குறைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.