சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் மடைமாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்.” என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதனை குறிப்பிட்டு இபிஎஸ் தனது எக்ஸ் பதிவில், ‘தமிழகம் இதுவரை கண்டிராத மிகவும் அநியாயமான, ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை நடத்தும் முதல்வர் “நியாயமான தொகுதி மறுவரையறை” பற்றிப் பேசுகிறார்.
முதலில், அவர் டாஸ்மாக் கொள்ளையை வரையறுக்கவும். போதைப்பொருள் மாஃபியாவை வரையறுக்கவும். சட்டவிரோத மதுபானத்தை வரையறுக்கவும். ரவுடித்தனத்தை வரையறுக்கவும். உங்கள் அமைச்சர்களின் ஊழலை வரையறுக்கவும். மிக முக்கியமாக, உங்கள் குடும்பத்தின் ஆணவம் மற்றும் தமிழ்நாட்டின் மீதான பிடியை வரையறுக்கவும் வேண்டும்.
தமிழ்நாட்டின் கண்ணியம், காவிரி உரிமைகள் மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்காக அச்சமின்றிப் போராடிய உயர்ந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் அழியாத கொள்கைகளில் அதிமுக உறுதியாக நிற்கிறது.
ஒவ்வொரு தமிழருக்கும் முன்பாகவும் நான் சபதம் செய்கிறேன்: நமது பிரதிநிதித்துவம் குறைக்கப்படவோ அல்லது நமது குரல் அடக்கப்படவோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 2027ம் ஆண்டில் அல்லது எல்லை நிர்ணயம் எப்போது வந்தாலும், மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் அதிமுக, தமிழ்நாட்டின் உரிமை குரலையும் எதிர்காலத்தையும் சிறப்பாக பாதுகாக்கும்.
முதல்வருக்கு, ஒரு பணிவான செய்தி: உங்கள் தோல்விகளையும் மோசடிகளையும் மறைக்க இதுபோன்ற கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். உங்கள் நாடகத்தாலும் முதலைக் கண்ணீராலும் தமிழக மக்கள் சோர்வடைந்துவிட்டனர்.
“அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்” என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது முதல்வர் ஸ்டாலினின் இந்த ட்வீட்.
தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்த போதே தெரிவித்தது நான்.
என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும். கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை!
இன்னும் வராத ஒன்றை “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை.
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுவரையறை குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள்!
மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்
The puppet CM speaks of “Fair delimitation” while presiding over the most unfair, corrupt, and dynastic regime Tamil Nadu has ever seen.
First, Delimit the TASMAC loot. Delimit the drug mafia. Delimit illicit liquor. Delimit rowdyism. Delimit the corruption of your ministers.… https://t.co/7z5WbpPvgh
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 6, 2025