வேலூர்: கரூர் விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிபதி பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். சீமானை கேட்டால், அவரும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறுவார். யார் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், தேர்தல் நேரத்தில்தான் எல்லாம் தெரியும்.
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு செல்லாத முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்றது ஏன் என்றும், விசாரணை ஆணையம் அமைத்தது குறித்தும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள்.
கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தபோது இருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு. நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது சாதாரண விஷயமா? உலகமே இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் முதல்வர் உடனடியாக அங்கு சென்றார்.
கரூர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால், அவரைக் கைது செய்வோம். தேவையில்லாத சூழலில் அவரைக் கைது செய்ய மாட்டோம். அநாவசியமாக அரசு யாரையும் கைது செய்யாது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.