நாகர்கோவில்: தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சுதந்திரதினம், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அவற்றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்களில் தேசியகீதத்துக்குப் பதிலாக, அதே மெட்டில் கிறிஸ்தவப் பாடலை பாடுவது, ஒலிபரப்புவதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் தேசியக் கொடியேற்றிய பின்னர், தேசிய கீதம் மெட்டுடன் கிறிஸ்தவப் பிரச்சார பாடல்பாடப்படும் வீடியோ கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த நிகழ்வு நடந்த இடம் நாகர்கோவில் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் மற்றும் உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “நாகர்கோவிலில் நடந்ததுபோல பரவி வரும் வீடியோவில், கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் பொதுமக்கள் தேசிய கீத மெட்டுடன் கிறிஸ்தவப் பாடலை பாடி கொடியேற்றுவது பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். வீடியோவில் பாடல் எடிட்செய்யப்பட்டதா எனவும் ஆய்வு செய்து வருகிறோம்.
உண்மைத் தன்மை குறித்து சைபர் கிரைம் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்” என்றனர். இந்நிலையில், பாடல் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் இந்து அமைப்பு பெயரிலான ‘லோகோ’ அச்சிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சுதந்திர தினத்தன்று இரவே முகநூலிலும் வெளியிட்டுள்ளனர். வீடியோ வெளியிட்டவரை கண்டறிந்து, உண்மை நிலையை அறிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, திருநெல்வேலி வழக்கறிஞர் அ.பிரம்மா கூறும்போது, “தேசியக் கொடியை ஏற்றிவைத்து, தேசிய கீதம் பாடாமல், மரியாதை மட்டுமே செலுத்துவது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், தேசிய கீதம் பாடலின் இசையை மத நோக்கில் பயன்படுத்துதல், அதை தேசியக்கொடி ஏற்றும் சமயத்தில் பாடுதல் ஆகியவை, அதிகாரப்பூர்வ தேசிய கீதத்தை மாற்றிப் பயன்படுத்தல் என்ற வகையில் அவமதிப்பாக கருதப்படும்.
தேசியக்கொடி ஏற்றும்போது அரசு அங்கீகரித்த தேசிய கீதம் மட்டுமே பாட வேண்டும். அதை தவிர்த்து, வேறு எந்தப் பாடலும் பாடக்கூடாது. தேசிய கீதத்தை புதிய மெட்டில் பாடினாலும், அது தேசியக்கொடிக்கான மரியாதை விதிமுறையை மீறுவதாகக் கருதப்படும்’’ என்றார்.