சென்னை: தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபடுமாறு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். மக்களின் கோரிக்கைகளைக் கேட்பதுபோல, திமுகவினரின் மனக்குரலை அறிந்து கொள்வதற்காக, ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல், சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து முதல்வர் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார். இதுவரை 12 நாட்கள் நடைபெற்றுள்ள கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி, வட்டம், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளை சந்தித்து, முதல்வர் கலந்துரையாடியுள்ளார். அப்போது நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டி, புத்தகங்கள் வழங்கியதோடு, தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.
குறிப்பாக தொகுதிகளில் ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக் கேட்டறிகிறார். தொழில், விவசாயப் பணிகள், குடும்ப நிலவரங்கள், அவர்களது வேலைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளையும் முதல்வர் வழங்குகிறார். இது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களை தொடர்புகொண்டு பல கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றினார். அப்போது, முதல்வருடனான பல பழைய பசுமையான நினைவுகளை நிர்வாகிகள் நினைவுப்படுத்தி மகிழ்ந்தனர்.
கூட்டத்தில் முதல்வர் வழங்கிய அறிவுரை குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்து கொள்ளும் அளவுக்கு பணியாற்ற வேண்டும். அனைத்துத் தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி திமுக அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும்.
பொது மக்களைச் சந்திக்கும்போது, மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன் எனும் வழியில் அணுக வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறியும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்க வேண்டும். இதில் எந்தவித சுணக்கமுமின்றி விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதைக் காப்பாற்ற அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல, தொண்டர்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் ஆனது. வெற்றியை பெற்றுத்தர அனைவரும் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.