சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, கட்சிப் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழக பாஜக சார்பில் மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது.
இதற்கு தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ரா தாகிருஷ்ணன், தமிழிசை, அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட புதிதாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சட்டப்பேரவை தேர்தல் வியூகம், கூட்டணி, களப்பணி தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை தலைவர்கள் வழங்கினர். அதிமுக – பாஜக கூட்டணியை பலப்படுத்துவது, தோழமை கட்சிகளான பாமக, தேமுதிகவை கூட்டணியில் நீடிக்க செய்வதற்கான அணுகுமுறைகள், சமூக ஊடகங்களை திறம்பட எவ்வாறு பயன்படுத்துவது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கினர்.
மேலும், கடந்த கால கசப்புகளை மறந்து அதிமுக – பாஜக கூட்டணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல உழைக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசும்போது, கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் (ஓபிஎஸ்) மீண்டும் நம் கூட்டணியில் இணைவார்கள். விரைவில் தமிழகம் வரும் பிரதமர் அதனை செய்து காட்டுவார் என அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பி.எல்.சந்தோஷ் – ஓபிஎஸ் சந்திப்புக்கு பாஜக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அவருடன் பாஜகவினர் தொலைபேசியில் பேசியிருந்தனர். ஆனால், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பேசி முடிவெடுப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர்களது சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால், 26-ம் தேதி மோடி தமிழகம் வரும்போது ஓபிஎஸ்ஸை சந்திக்க வைத்து, மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.