சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதங்கள் முடிந்து விட்டன.
ஆனாலும் பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் இன்னும் நிறைவேற்றவே இல்லை. 60 மாதம் கொண்ட சட்டசபையின் ஆட்சி காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ளன. இதிலும் அடுத்த 2026 சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தால் அதன் பின்னர் முதல்வரால் தன்னிச்சையாக எதையுமே செய்ய முடியாது.
எனவே, ஆட்சி அதிகாரம் முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும்போதே போர்க்கால அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏற்கனவே 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலும், தற்போது 5 ஆண்டுகள் திமுக ஆட்சியிலும் தொகுப்பூதியத்தில் 15 ஆண்டுகளாக வேலை செய்வதால் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தவர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்காமல், வெறும் 2,500 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் தான் வழங்கினார் என்பது சமூக நீதி ஆகாது. மே மாதம் சம்பளம், மரணம் அடைந்தால் நிவாரணம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, போனஸ் உள்பட அரசு சலுகைகள் இல்லாமல் தற்போதைய 12,500 ரூபாய் சொற்ப சம்பளத்தில் இன்றைய விலைவாசியில் அடிப்படை தேவைகளை செய்து கொள்ள முடியவில்லை.
இனியும் படிப்படியாக என சொல்லி முழு நேர வேலை, சம்பள உயர்வு என மீண்டும் தொகுப்பூதியத்தையே தொடராமல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இந்த நீண்ட கால பிரச்சினையில் இருந்து மீள இனி பணி நிரந்தரம் செய்வது மட்டுமே முழு தீர்வு. பணி நிரந்தரம் செய்து விட்டால் முழு நேர வேலை, காலமுறை சம்பளத்துடன் அரசு சலுகைகள் அனைத்துமே கிடைத்து விடும்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னாலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுவரை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்துமே குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
எனவே, திமுகவின் 2016 மற்றும் 2021 என இரண்டு தேர்தல்களிலும் கொடுத்த வாக்குறுதி என்பதால் முக்கியத்துவம் முன்னுரிமை கொடுத்து முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க அரசு தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும். இதை அமைச்சரவை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.