தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்க, மே 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்தாண்டே ஆளும் திமுக களப்பணிகளை தொடங்கிவிட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் மாவட்டம் வாரியாக அணிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி, பல்வேறு பரிந்துரைகளை கட்சி தலைமைக்கு வழங்கிவிட்டனர். இதில் இரண்டு பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற பரி்ந்துரையும் உள்ளது. கட்சியில் இளைஞரணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் வழங்குவது என்பதே இதன் நோக்கமாகும். இதில் சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்படவில்லை.
முதல்வரும், துணை முதல்வரும் மாவட்ட வாரியாக செல்லும்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தனர். இந்நிலையில்தான், சேராது என்று கணிக்கப்பட்ட அதிமுகவும்- பாஜகவும் கூட்டணியை அறிவித்துவிட்டன. இதுதவிர, தவெகவும் நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண்கின்றன. இதில் தவெகவானது, திமுகவை கடுமையாக எதிர்ப்பதால், அக்கட்சியின் வாக்குகளை பிரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அதேநேரம், திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியில் செல்லாது என்று திமுக தரப்பு உறுதியாக இருப்பதால், வெற்றி நிச்சயம் என கூறி வருகின்றனர்.
இந்தச் சூழலில், சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, கட்சிப்பணிகள் குறிப்பாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் மே 3-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
முன்னதாக, மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், மே 3-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில், தேர்தல் பணிகளை உடனே தொடங்குவது, கட்சி நிர்வாகிகள் மாற்றம், இளம் நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் போன்றவை விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.