சென்னை: தேர்தல் ஆணைய முறைகேடு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் நடந்ததாக ராகுல்காந்தி வெளியிட்ட தரவுகள் குறித்து தேசிய செயலாளர் பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தமிழில் விளக்கினார்.
தொடர்ந்து, எழுத்தாளர் வா.மு.சேதுராமன், பேராசிரியர் வசந்தி தேவி, காங்கிரஸ் நிர்வாகிகள் சுஜாதா, இரா.வாசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்தும், முறை கேடுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தும், தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு முதல்வர் உரிய தீர்வுகாண வலியுறுத்தல், ஆணவ படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தல், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை தடுக்க வலியுறுத்தல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டமும், கிரிஷ் சோடங்கர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசியபோது, “தேர்தல் ஆணைய முறைகேடு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த இருக்கிறோம். அதில் 1 கோடி பேர் கையெழுத்திட உள்ளனர்” என்றார்.