சென்னை: வாக்காளர் பட்டியல் மோசடி புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் என மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப் படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கோரி கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், ”அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை, பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் PDF வடிவில் வெளியிட வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்றும் மனுவில் கூறி இருந்தார்.
இந்த பொது நல வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வாக்காளர் பட்டியல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது… விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.