சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி விடுத்த அழைப்பை தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் உடனே நிராகரித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திமுகவை தோற்கடிக்க ஒருமித்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் கைகோக்க வேண்டும்.
இது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கொள்கை விளக்க மாநாடு பற்றிய புகைப்படம் தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தவெக கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுடைய முதல்வர் வேட்பாளர் தவெக தலைவர் விஜய்தான் என்பதை செயற்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றி விட்டோம். எங்கள் கூட்டணியில் யாரைச் சேர்ப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். டிசம்பருக்கு பிறகுதான் அதுகுறித்து முடிவு எடுப்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குழப்பமான மனநிலையில் உள்ளார். தங்களுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தன்னை பெரும் தலைவர் என்றும், நல்ல கூட்டணியை உருவாக்கி விடுவேன் என்ற தோற்றத்தையும் கட்டமைக்கவே இதுபோல் தவறான கருத்தைக் கூறி வருகிறார்.
மேலும், அதிமுக – பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாது என்பதாலேயே பிரம்மாண்ட கட்சி எங்கள் கூட்டணிக்கு வர உள்ளது என்றும் கூறுகிறார்.இதுவரை யாரிடமும் நாங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கள் முதல்வர் வேட்பாளர் விஜய்தான். இவ்வாறு தெரிவித்தார்.
சீமான் திட்டவட்டம்: இதேபோல் பழனிசாமியின் அழைப்பை நிராகரித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் சீமான் நேற்று கூறியதாவது: பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று ஓர் அணியும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மற்றொரு அணியும் கூறுகின்றன. திமுகவை வீழ்த்த அதிமுகவின் அழைப்பை ஏற்பது சரியாகாது.
தீமைக்கு மற்றொரு தீமை மாற்றாகாது. எனவே, பழனிசாமியின் அழைப்பை நிராகரிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மக்களின் தேவையை நிறை வேற்றி இருந்தால், தேசியக் கட்சிகள் தமிழகத்தில் வளர வேண்டிய நிலை உருவாகியிருக்காது.
காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே தமிழகத்துக்கு எதிராக உள்ளன. முல்லை பெரியாறு நீரைப் பெற காங்கிரஸ் தடையாக உள்ளது. தமிழகத்தில் இந்தியை திணித்தது, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து மாற்றியது, ஜிஎஸ்டியை கொண்டு வந்தது, நீட் தேர்வைத் திணித்தது, டிஎன்பிஎஸ்சி தேர்வை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று கையெழுத்திட்டது, கேரளாவில் விரட்டப்பட்ட அணு உலையை தமிழகத்தில் திணித்தது யார் என்று அனைவருக்கும் தெரியும்.
திமுகவும், பாஜகவும் ஒருவரையொருவர் எதிர்ப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கி, நாடகம் நடத்துகின்றனர். திருப்பரங்குன்றம் மலைக்கு போராடும் பாஜக, மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி எடுப்பதை கண்டித்து ஏன் போராடவில்லை. பாஜகவுடன் நேரடியாக அதிமுகவும் மறைமுகமாக திமுகவும் கூட்டணி வைத்துள்ளன. நான் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வெல்லாது. பாஜகவுக்கு நான் ‘பி’ டீம் என்று கூறினால், திமுகதான் ‘ஏ’ டீம். மக்களுடன்தான் எனது கூட்டணி. இவ்வாறு சீமான் கூறினார்.